அமெரிக்க பங்குச் சந்தை திங்கட்கிழமை அன்று பெரும் சரிவை சந்தித்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அடித்து நொறுக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி நடைமுறைப்படுத்த உள்ள ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
இதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்பனை செய்வதை அதிகரித்தனர், இதனால் எப்போதும் இல்லாமல் ஒரே நாளில் அமெரிக்க பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு நான்கு டிரில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. இதனால் அமெரிக்ககாவில் ரெசிஷன் அச்சமும் அதிகரித்துள்ளது.

இந்த திடீர் சரிவு ஒரு தற்காலிக நிகழ்வு அல்ல, அந்நாட்டு பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ள அச்சத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான எஸ்&பி 500, பிப்ரவரி 19ஆம் தேதி அடைந்த வரலாற்று உச்சத்தில் இருந்து 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்&பி 500 மட்டும் அதன் உச்சத்தில் இருந்து 8.6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது, இது முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பில் மிகப்பெரிய ஓட்டை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் காம்போசிட் குறியீடும் டிசம்பர் மாத உச்சத்தில் இருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது, இது அமெரிக்க பங்குச்சந்தையின் மிகப்பெரிய கரெக்ஷனாக பார்க்கப்படுகிறது.
டெக் துறையை எடுத்துக்கொண்டால் டெஸ்லா நிறுவனம் இந்த கருப்பு திங்கட் வர்த்தகத்தில் 125 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்தன. ஆப்பிள் மற்றும் என்விடியா போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் சுமார் ஐந்து சதவீதம் வரை சரிந்தன. ஒட்டுமொத்தமாக எஸ்&பி 500 தொழில்நுட்பத் துறை 4.3 சதவீதம் குறைந்தது. அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் நேற்றைய வர்த்தகத்தில் சுமார் 11 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
அமெரிக்காவின் டெக் துறையைத் தவிர, விமானத் துறையும் பாதிப்பை சந்தித்தது. டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் தனது முதல் காலாண்டு லாப கணிப்புகளை பாதியாக குறைத்ததால், அதன் பங்கு விலை 14 சதவீதம் வரை சரிந்தது.
இதன் தாக்கம் கட்டாயம் இந்திய சந்தையில் இன்று எதிரொலிக்கும், இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் குறியீடு 425 புள்ளிகள் சரிந்து 73,690 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications