உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு சுமார் 81 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
81 டிரில்லியன் டாலர் என்பது உலகளாவில் அனைத்து பங்குச் சந்தை மதிப்பில் சுமார் 48 சதவீதத்தை அமெரிக்க என்ற ஒரு நாடு மட்டுமே கொண்டுள்ளது. இந்த அளவு வளர்ச்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானது.

சீனாவை விட 375% பெரிய அமெரிக்க சந்தை
உலகின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தையான சீனாவின் மதிப்பு 17 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், அமெரிக்கா அதை விட 375 சதவீதம் பெரிய அளவில் அதிகளவில் இருக்கிறது. மேலும், சீனா, ஜப்பான், ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளின் மொத்த மதிப்பை விட அமெரிக்க சந்தை இரு மடங்கு பெரியதாக உள்ளது. உலகின் 18 பெரிய பங்குச் சந்தைகளின் மொத்த மதிப்பையும் அமெரிக்கா தனியாக மிஞ்சி நிற்கிறது.
மேக்னிஃபிசெண்ட் 7 நிறுவனங்களின் ஆதிக்கம்
அமெரிக்க பங்குச்சந்தையில் குறிப்பாக, ஆப்பிள், மைக்ரோசாப்ட், என்விடியா உள்ளிட்ட மேக்னிஃபிசெண்ட் 7 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு மட்டுமே சீனாவின் முழு பங்குச் சந்தை மதிப்பை விட அதிகமாக உள்ளது.
தொழில்நுட்பத் துறையின் வேகமான வளர்ச்சியும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய எதிர்பார்ப்பும் இந்த ஆதிக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இந்த நிலை பொருளாதார வல்லுநர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 1ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அமெரிக்க தொழில்நுட்ப பண்டுகள் மீது 14.3 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய முதலீடுகள் வந்துள்ளன. இது சமீபத்திய காலத்தில் இரண்டாவது உயர் அளவு என்ற சாதனையாகும். முந்தைய வாரத்தில் 9.3 பில்லியன் டாலர் வெளியேற்றம் இருந்த நிலையில், இந்த திருப்பம் குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு வாரங்களின் சராசரி வரவு 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த போக்கு தொடர்ந்தால், 2026ஆம் ஆண்டு முழுவதும் தொழில்நுட்ப நிதியங்களுக்கு 152 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வாரத்தில் பொதுவான அமெரிக்க பங்கு நிதியங்களில் இருந்து 17.2 பில்லியன் டாலர் வெளியேற்றப்பட்டுள்ளது. இது மார்ச் மாதத்துக்குப் பிறகு இல்லாத அளவுக்கு அதிகமான வெளியேற்றமாகும். முதலீட்டாளர்கள் தொழில்நுட்பத் துறையை நோக்கி தீவிரமாக திரும்பி வருவதை இந்தப் போக்கு தெளிவாகக் காட்டுகிறது.
உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் இந்த மேலாதிக்கம் இந்திய முதலீட்டாளர்களுக்கும் முக்கிய பாடத்தை அளிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை கவனமாக கண்காணிப்பது எதிர்கால முதலீட்டு முடிவுகளுக்கு உதவியாக இருக்கும். இந்தப் போக்கு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை சந்தை நிலவரங்கள் தீர்மானிக்கும்.


Click it and Unblock the Notifications