நியூயார்க்: அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் , அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கும் இந்தியர்கள் எப்படி தங்களுடைய போர்ட்போலியோவை மாற்றியமைக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பலரும் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து பெரிய அளவில் வெளியேறி வருகின்றனர். இதனால் மூன்று வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருந்த எஸ்&பி 500 இன்டெக்ஸ் தற்போது 10% வரை சரிவடைந்துள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுடனும் வர்த்தக போரை தொடங்கியிருக்கிறது.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது, பணவீக்கம் உயர்வது, பொருளாதார மந்த நிலைக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பது உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து தங்களுடைய முதலீடுகளை திரும்ப பெற்ற வண்ணம் இருக்கின்றனர்.
நாஸ்டாக் வெளியிட்டுள்ள தகவலின் படி எஸ்&பி 500 குறியீடு 10.4 சதவீதம் வரைந்து இருக்கிறது. டிரம்ப் நிர்வாகம் இறக்குமதி வரி தொடர்பான அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருவதன் காரணமாக முதலீட்டாளர்கள் தற்போது எந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.
கிடைத்த வரையில் லாபம் என பங்குகளை விற்பனை செய்து வருவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டும் இன்றி பொருளாதாரம் சரிவடைந்து வருவதும் பொருளாதார மந்த நிலைக்குள் செல்வதற்கான காரணங்கள் வலுத்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த பொருளாதார மந்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகள் தான் என கூறுகின்றனர்.
டிரம்ப் அரசு வரும் ஏப்ரல் முதல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதும் போட்டி வரியை அமல்படுத்த இருக்கிறது. எனவே அடுத்து வரும் சில மாதங்களிலும் இந்த பங்கு மதிப்பு சரிவு தொடங்கும் என கூறுகின்றனர். எனவே அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க பங்குச் சந்தையில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்படும் என பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்கள் எச்சரிக்கை விடுக்கின்றன.
தற்போதைக்கு அமெரிக்க பங்கு சந்தை கரடியின் பிடியில் சென்று விடவில்லை ஆனால் அதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும் என கூறுகின்றனர். இந்த அமெரிக்க பங்கு சந்தை சரிவு இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு அமெரிக்க பங்கு சந்தையில் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது பொறுமையுடன் காத்திருக்க தயார் என இருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை தொடரலாம் என்றும், அதற்கு அடிப்படை வலுவாக இருக்கக்கூடிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி இருப்பவர்கள் நம்பிக்கையோடு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தை சரிவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உயர்தரமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கி போடலாம் என்று அறிவுரை வழங்குகின்றனர். எனவே அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் பதட்டத்தில் பங்குகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications