ஈரானின் மூன்று அணு ஆயுத தளங்களை (ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்ஃபஹான் (Isfahan)) அமெரிக்கா தாக்கியதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் திங்கள்கிழமை கடுமையான ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை சார்ந்த பங்குகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் நேரடி தலையீட்டை தொடர்ந்து இஸ்ரேல்-ஈரான் மோதல் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ள வேளையில், சர்வதேச பங்குச் சந்தைகளில் பதற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசு தரப்பில் இனி ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான எவ்விதமான திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது. மேலும் ஈரானுக்கு இனி போரை நிறுத்த பேச்சுவார்த்தையை குறைப்பதற்கான வாய்ப்பும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் நேரடி தலையீடு பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் உலகளவில் அதிகரித்தே முதலீட்டு சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என கூற முக்கியமான காரணமாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை ஒன்று திரட்ட முயற்சி செய்யும் என எதிர்பார்ப்பு உள்ளதால், 3ஆம் உலக போர் வெடிக்கும் அபாயமும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் அச்சம் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக கச்சா எண்ணெய் விலைகள் சுமார் 13% உயர்ந்துள்ளன. இதேபோல் உலகின் 20% எண்ணெய் செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூட திட்டமிட்டு வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் இந்த வாரமும் அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இந்த வாரம் முழுக்க மிகுந்த கவனத்துடன் தான் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுக்குறித்து Jefferies கூறுகையில், இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் நேரடி தலையீடு கச்சா எண்ணெய் விலையில் கடுமையான உயர்வை ஏற்படுத்தலாம் எனக் கூறுகிறது, இது டிரம்பின் MAGA கொள்கைக்கு முரணானது என்றும் விமர்சனம் செய்துள்ளது.
இதேபோல் Emkay Global, ஈரான் அமெரிக்கா உடனான நேரடி போரில் வெல்ல முடியாது எனவும், இது ஆட்சி மாற்ற அபாயத்தை உயர்த்தும் எனவும் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் இந்தியாவின் 51 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதிக்கும் அதன் விலை உயர்வுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1046.30 புள்ளிகள் உயர்ந்து 82,408.17 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 319.15 புள்ளிகள் உயர்ந்து 25,112.40 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications