பிரபல ஆடை நிறுவனமான வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனம் பிப்ரவரி 4 அன்று தனது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
ஏஜிஎஸ் ட்ரான்சாக்ட் டெக்னாலஜிஸ் மற்றும் அதானி வில்மருக்கு பிறகு,இது இந்த ஆண்டின் மூன்றாவது பொது பங்கு வெளியீடாகும்.
பிப்ரவரி 4 அன்று தொடங்கவுள்ள இந்த பங்கு வெளியீடானது, பிப்ரவரி 8 அன்று முடிவடையவுள்ளது. இதே ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு பிப்ரவரி 3 அன்றே இந்த வெளியீடு தொடங்கவுள்ளது.
விலை நிலவரம்
இந்த ஐபிஓவிற்கான விலை ஒரு பங்கிற்கு 824 - 866 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 3149.2 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது. இதன் மூலம் 3,63,64,838 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இது அதன் முதலீட்டாளர்கள் மற்றும் புரோமோட்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.
புரோமோட்டர்கள்
இதில் ரைன் ஹோல்டிங்ஸ் 1,74,59,392 பங்குகளையும், கேதாரா கேப்பிட்டல் ஆல்டர் நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் - கேதாரா கேபிடல் ஏஐஎஃப் 1 - 7,23,014 ஈக்விட்டி பங்குகளும், ரவி பேமிலி ட்ரஸ்டின் 1,81,82,432 பங்குகளும் அடங்கும்.
லாட் சைஸ்
குறைந்தபட்சம் 17 பங்குகள், 17 ஈக்விட்டி பங்குகளின் மடங்கில் வாங்கலாம். சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டுக்கு குறைந்தபட்சம் 14,722 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதேபோல ஒருவர் அதிகபட்சம் 13 லாட்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்காக 1,91,386 ரூபாயினை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
யாருக்கு எவ்வளவு?
இந்த மொத்த வெளியீட்டில் பாதியினை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆடை நிறுவனமான இது, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஆறு மாதங்களில் நல்ல விற்பனையை கண்டுள்ளது. குறிப்பாக அதன் விற்பனையில் 44.76% அதன் ப்ரான்சைஸி மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பட்டியல் எப்போது?
பிப்ரவரி 8 அன்று முடிவடையவுள்ள வெளியீடானது, பிப்ரவரி 11 அன்று ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 14 அன்று பங்கு கிடைக்காதவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்படுகிறது. இதே பிப்ரவரி 15 அன்று டீமேட்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 16 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications