வெனிசுலாவின் காரகாஸ் பங்குச் சந்தை இண்டெக்ஸ் (IBC) செவ்வாய்கிழமை ஒரே நாளில் 50 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. பொதுவாக ஒரு நாட்டில் தாக்குதல் ஏற்பட்டால் பங்குச்சந்தை, நாணய மதிப்பு ஆகியவை பெரிய அளவில் சரியும். ஆனால் வெனிசுலா நிலைமை தலைகீழாக உள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலால் வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்பு அமெரிக்கா வெனிசுலாவின் மொத்த கச்சா எண்ணெய் வளத்தையும் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ புதிய அதிபராக நியமித்தது.

ஆனால் முதலீட்டாளர்ரள் வெனிசுலாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை சந்தை நம்பிக்கையாகப் பார்க்கின்றனர். அமெரிக்கா வெனிசுலாவை கைப்பற்றியது மூலம் வெனிசுலாவின் பொருளாதார எதிர்காலத்தில் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை வெனிசுலாவில் தாக்குதலை நடத்தியது, திங்கட்கிழமை வெனிசுலா பங்குச்சந்தை IBC குறியீடு 16 சதவீதம் உயர்ந்தது, செவ்வாய்க்கிழமை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜனவரி மாதத்தின் இரு நாட்களில் மட்டும் 87 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசம்பர் 29 அன்று IBC குறியீடு 22 சதவீதம் உயர்ந்தது, புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 2ஆம் தேதியன்று வெனிசுலா பங்குச்சந்தை திறந்த நிவையில் அந்நாளில் 7 சதவீதம் அதிகரித்தது. ஜனவரி மாதத்தின் 3 நாள் வர்த்தகத்தில் 94 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
2025இல் நவம்பர் மாதம் தவிர ஒவ்வொரு மாதமும் உயர்வை பதிவு செய்துள்ளது, இதன் மூலம் 2025ஆம் ஆண்டு முழுவதும் 1,644 சதவீதம் வளர்ச்சி பெற்றது. 2018இல் தொடங்கிய வெனிசுலா பங்குச்சந்தை 2019இல் 4,400 சதவீதமும், 2020இல் 1,380 சதவீதமும் உயர்ந்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளில் குறைந்தது 100 சதவீதம் ஆண்டு வளர்ச்சி கண்டது, 2024இல் 106 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
2018 திருப்புமுனை
2018 ஆம் ஆண்டில், வெனிசுலா IBC குறியீடு அதிக வர்த்தக அளவைக் கண்டதற்கு முக்கிய காரணம், அப்போது தான் அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்ட பங்குச் சந்தை வர்த்தகத் தரவு சேகரிப்பு தொடங்கி, ரிப்போர்ட்டிங் முறை நடைமுறைக்கு வந்தது. அந்நாட்டில் நிலவிய மோசமான கட்டுக்கடங்காத பணவீக்கத்திலிருந்து தப்பிக்க உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பைப் பாதுகாக்கக் பங்குச்சந்தை பக்கம் திரும்பினர்.
2018 ஆம் ஆண்டில் வெனிசுலாவின் பணவீக்கம் சுமார் 1,30,000% ஐ எட்டியதால், அந்நாட்டின் தேசிய நாணயமான பொலிவாரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதிலிருந்து தங்கள் மூலதனத்தின் மதிப்பைப் பாதுகாக்க முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை நாடினர்.
வெனிசுலா பங்குச்சந்தை உயர என்ன காரணம்?
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோ இப்போது போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்ட 4 முக்கிய குற்றச்சாட்டுகள் கீழ் அமெரிக்காவில் விசாரணை எதிர்கொள்கிறார். இந்த நிகழ்வு வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளும், கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, அமெரிக்கா உடனான உறவுகளில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதனாலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.
இதற்கு ஏற்றார் போல் நிகோலஸ் மதுரோ சிறையில் அடைக்கப்பட்ட 3வது நாள் வெனிசுலாவில் இருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 30-50 பில்லியன் டாலர் கச்சா எண்ணெயை எவ்விதமான தள்ளுபடியும் இல்லாமல் சந்தை விலைக்கே அமெரிக்க வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வெனிசுலா பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு அரசியல் மாற்றத்தாலும், கச்சா எண்ணெய் சந்தை வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டது. ஆனால், வெனிசுலா சந்தை பெரிய உயர்வுகளுக்குப் பிறகு திடீர் வீழ்ச்சிகளை சந்தித்த வரலாறு உள்ளது.
ஆனாலும் சில முதலீட்டாளர்கள் இதை நீண்டகால வளர்ச்சியின் தொடக்கமாகப் பார்க்கின்றனர், ஆயினும் சிலர் இது தற்காலிக உயர்வு என்று எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications