இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கி வரும் வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் திங்களன்று 8% வரை உயர்ந்து, நான்கு மாத உச்சத்தை எட்டியது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.9,450 கோடி மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகைகள் குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 19 அன்று விசாரிக்கவுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, பங்கு மதிப்பு உயர்ந்தது.
திங்களன்று, மும்பை பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 8.21% உயர்ந்து ஒரு பங்கு ரூ. 8.30 ஆக வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை 35% அதிகரித்துள்ளது. இருப்பினும், நடப்பு ஆண்டில் (YTD) இது வெறும் 3% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறை (DoT) விதித்துள்ள கூடுதல் AGR நிலுவைத் தொகையான ரூ.9,450 கோடியை எதிர்த்து வோடபோன் ஐடியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ள செய்தி, இன்றைய பங்கு உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
வோடபோன் ஐடியா தாக்கல் செய்த மனுவில், 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் AGR தீர்ப்பின் வரம்புகளை மீறி, இந்தத் திருத்தப்பட்ட தொகை கணக்கிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. சில தொகைகள் இருமுறை கணக்கிடப்பட்டு இருப்பதாகவும், 2017ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து நிலுவைத் தொகைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஆனால், CNBC-TV18 அறிக்கையின்படி, இந்த கூடுதல் நிலுவைத் தொகை முந்தைய கணக்குத் தணிக்கையில் ஏற்பட்ட வித்தியாசத்தின் காரணமாகவே ஏற்பட்டது என்றும், மறுமதிப்பீடு அல்லது மறுசீரமைப்பு காரணமாக இல்லை என்றும் தொலைத்தொடர்புத் துறை விளக்கம் தந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில், முந்தைய ஆண்டுகளுக்கான நிதிநிலைக் கணக்குகள் நிறைவடைந்ததால் இந்த நிலுவைத் தொகைகள் ஏற்பட்டதாக DoT தரப்பில் வாதிட்டுள்ளது. மேலும், இந்த கூடுதல் தொகையில் 2018-19 நிதியாண்டுக்கான ரூ. 2,774 கோடி மற்றும் வோடபோன் குழுமத்தின் இணைப்புக்கு முந்தைய ரூ. 5,675 கோடி நிலுவைத் தொகைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளது.
இந்த உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவு வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நிறுவனம், நிதி திரட்டுவதற்கும், சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதற்கும் தீவிரமாக முயற்சித்து வருகிறது. எனவே தான் இந்த வழக்கின் விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு மேற்கொண்டு வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் வகையில் அமையும். இன்று மதியம் 1:15 மணி நிலவரப்படி, வோடபோன் ஐடியா பங்குகள் 8.21% உயர்ந்து ரூ. 8.30 ஆக வர்த்தகமானது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications