கொரோனா காலத்தில், அன்றாட வேலைகளைச் செய்து வாழ்வதே பலருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இருப்பினும் பெரு நிறுவனங்களுக்கும், உலக கோடீஸ்வரர்களுக்கும் கொரோனா ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஒரு சிறிய தடைக்கல்லாகத் தான் தெரிகிறது எனப்தை மீண்டும் மீண்டும் பல நிறுவனங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன.

சமீபத்தில் கடந்த சில வாரங்களில், முகேஷ் அம்பானி, தன் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் பங்குகளை ஃபேஸ்புக் தொடங்கி, சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் என பல நிறுவனங்களுக்கு விற்று சுமாராக 75,000 கோடி ரூபாயைத் திரட்டிவிட்டார்.
இப்போது அதே போல உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனிகளில் ஒன்றான கூகுள், வொடாபோன் ஐடியா நிறுவனத்தில் சுமாராக 5 சதவிகித பங்குகளை, வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்த செய்தி வந்தது தான் தாமதம். வொடாபோன் ஐடியா கம்பெனியின் பங்குகள் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் 5.80 ரூபாய்க்கு நிறைவடைந்து இருந்தது வொடாபோன் ஐடியா பங்கு விலை. ஆனால் இன்று காலை எடுத்த எடுப்பிலேயே 6.35 ரூபாய்க்கு தான் வர்த்தகமாகத் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 7.80 ரூபாய் வரை விலை அதிகரித்து இருக்கிறது.
ஆக, இன்று ஒரே நாளில், வொடாபோன் ஐடியா பங்கு விலை, சுமாராக 34 சதவிகிதம் வரை விலை அதிகரித்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
உண்மையாகவே, கூகுள் நிறுவனம், இந்தியாவின் வொடாபோன் ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்யத் தான் போகிறதா? அப்படி முதலீடு செய்கிறார்கள் என்றால் எதற்கு செய்கிறார்கள்? கூகுள் நிறுவனத்தின் திட்டம் என்ன என்பதை எல்லாம் இனி, இந்த கம்பெனிகள் தான் விளக்க வேண்டும்.
ஒருவேளை கூகுள் நிறுவனம், வொடாபோன் ஐடியா கம்பெனியில் முதலீடு செய்தால், ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் வொடாபோன் ஐடியா கம்பெனிக்கு, இது மிகப் பெரிய திருப்புமுனையாக அமையாலாம். மீண்டும் ஜியோ, ஏர்டெல் உடனான போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications