இந்தியாவில், கடந்த 2016-ம் ஆண்டில், ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, இந்திய டெலிகாம் வியாபாரத்தில் கால் அடி எடுத்து வைத்ததில் இருந்து, பல கம்பெனிகளும் தங்கள் வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய தேதிக்கு, இந்தியாவில் முக்கிய டெலிகாம் நிறுவனங்கள் என பட்டியல் போட்டால், ஜியோ, ஏர்டெல், வொடாபோன் ஐடியா என 3 கம்பெனிகள் தான் வருகின்றன.
அதிலும் வொடாபோன் ஐடியாவின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. சரி இன்றைய பங்கு விலை ஏற்றத்துக்கு வருவோம்.
வொடாபோன் ஐடியா பங்கு விலை
நேற்று மாலை வொடாபோன் ஐடியா பங்கு விலை, மும்பை பங்குச் சந்தையில் 8.89 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.25 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய வொடாபோன் ஐடியா பங்குகள், வர்த்தக நேர முடிவில் 9.91 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக ஒரே நாளில் 11.47 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.
என்ன காரணம் - ஏஜிஆர்
நேற்று (01 செப்டம்பர் 2020), உச்ச நீதிமன்றம் ஏஜிஆர் வழக்கில் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது. டெலிகாம் கம்பெனிகள், அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுத் தவணையாக, ஏஜிஆர் பாக்கித் தொகைகளைச் செலுத்த கால அவகாசம் கொடுத்து தீர்ப்பு அளித்தது. ஆண்டு தவணைக்கு 8% வட்டி செலுத்த வேண்டும். வரும் 31 மார்ச் 2021-க்குள், ஏஜிஆர் நிலுவைத் தொகையில் 10 சதவிகித தொகையைச் செலுத்தச் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
என்ன காரணம் - 4000 கோடி ரூபாய்
உச்ச நீதிமன்றம், ஏஜிஆர் நிலுவைத் தொகைகளைச் செலுத்த கால அவகாசம் கொடுத்த பின், வொடாபோன் ஐடியா தொடர்பாக, மற்றொரு நல்ல செய்தியும் வந்திருக்கிறது. வொடாபோன் ஐடியா நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் வைத்திருக்கும் 11.5 % பங்குகளை விற்று சுமாராக 4,000 கோடி ரூபாயை திரட்ட இருக்கிறதாம்.
பணத்தை திரட்டிவிடுவோம்
இது போக, வொடாபோன் ஐடியா நிறுவனம், public issue, preferential allotment, private placement, qualified institutions placement... என எப்படியாவது பணத்தைத் திரட்டி விடும் என, ரெகுலேட்டரி ஃபைலிங்கில் நம்பிக்கை அளித்து இருக்கிறது. இந்த ஒட்டு மொத்த சம்பவங்களின் தொகுப்பாகத் தான், இன்று பங்கு விலை, தாறுமாறாக ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆக மீண்டும் இந்திய டெலிகாம் வியாபாரத்தில், வொடாபோன் ஐடியாவின் இடம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications