நேற்று மாலை சென்செக்ஸ், 38,990 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை, சென்செக்ஸ் 38,325 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, குறைந்தபட்சமாக 38,299 புள்ளிகள் வரை சரிந்தது. இது நேற்றைய குளோசிங் புள்ளி உடன் ஒப்பிட்டால் 691 புள்ளிகள் சரிவு.
தற்போது 38,680 புள்ளிகளில், 310 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இப்படி சென்செக்ஸ் திடீரென இறக்கம் காண என்ன காரணம்? உலக பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
1. நேற்று அமெரிக்க பங்குச் சந்தை
நேற்று 03 செப்டம்பர் 2020, அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை யாரும் எதிர்பாராத வகையில் 4.96 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது. அதே போல டவ் ஜோன்ஸ் சந்தையும் 2.78 % சரிவைக் கண்டு இருக்கிறது. அமெரிக்காவின் எஸ் & பி 500 இண்டெக்ஸ் 3.51 % சரிந்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது. இது இன்றைய சென்செக்ஸ் வர்த்தகத்தில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
2. இன்று ஆசிய சந்தை
இன்று 04 செப்டம்பர் 2020, ஆசியாவில் எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, ஜப்பானின் நிக்கி 1.11 %, தென் கொரியாவின் கோஸ்பி 1.15 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஒட்டு மொத்த ஆசிய சந்தைகளும் அடி வாங்கி இருக்கும் போது, இந்திய பங்குச் சந்தைகள் மட்டும் ஏற்றம் காண்பது சிரமம் தானே?
3. கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39.36 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அசால்டாக 75 - 80 ஆயிரம் பேர், இந்தியாவில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த சில நாட்களில், இந்தியா, பிரேசிலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா 2-வது இடத்தை பிடித்துவிடும் போலிருக்கிறது. இது பங்குச் சந்தையில் பிரதிபலிக்கிறது. சென்செக்ஸ் சரிகிறது.
4. சேவைத் துறை
இந்திய பொருளாதாரத்தில், சேவைத் துறைக்குத் தான் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. இந்த சேவைத் துறைக்கான பி எம் ஐ, கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில் 41.8 புள்ளியாக இருக்கிறது. பி எம் ஐ 50 புள்ளிகளுக்கு கீழ் இருக்கிறது என்றால், வீழ்ச்சியில் இருப்பதாகத் தான் பொருள். 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் தான் வளர்ச்சியில் காண்பதாக அர்த்தம். பி எம் ஐ 50 புள்ளிகளுக்கு கீழ் இருப்பது, தொடர்ச்சியாக இது 6-வது மாதம். இந்த டேட்டாவும், சந்தையில் ஒரு விதமான நெகட்டிவ் செண்டிமெண்டை கிளப்பி இருக்கிறது. சந்தை சரிந்து கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications