பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது 2024 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக இருந்ததன் எதிரொலியாக இன்று பங்குச் சந்தையில் விப்ரோ பங்கு விலை நல்ல ஏற்றம் கண்டது. பங்குச் சந்தையில் வர்த்தத்தின் இடையே விப்ரோ பங்கு விலை 5 சதவீதம் வரை உயர்ந்தது.

விப்ரோ நிறுவனம் 2024 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,354 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 அக்டோபர்-டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். மேலும், கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.22,319 கோடியாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் அதிகமாகும். 2023 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 5 சதவீதமும், வருவாய் 0.1 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் 350 கோடி டாலர் மதிப்பிலான வர்த்த ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இதில் பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் 96 கோடி டாலராகும். மேலும் நிலையான ரூபாய் மதிப்பு அடிப்படையில், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும். விப்ரோவின் நிதி நிலை முடிவுகள் மற்றும் ஆர்டர்கள் நிலவரம் முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் காரணமாக இன்று பங்குச் சந்தையில் விப்ரோ பங்குகளுக்கு நல்ல தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே விப்ரோ பங்கு புதிய 52 வார உச்ச விலையான ரூ.324.55ஐ எட்டியது. இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில் விப்ரோ பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.78 சதவீதம் உயர்ந்து ரூ.317.65ல் முடிவுற்றது.
அமெரிக்கா, ஏஐ துறையில் 50,000 கோடி டாலர் முதலீடு செய்யும் என்ற தகவலால், சர்வதேச அளவில் ஐடி பங்குகள் ஏற்றம் கண்டன அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இந்திய பங்குச் சந்தையில் இன்று அனைத்து ஐடி பங்குகளுக்கும் நல்ல தேவை இருந்தது. இதனால் நிப்டி ஐடி குறியீடு 2 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications