சோமேட்டோ பங்கு விலை இன்று மும்பை பங்குச்சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7.5% உயர்ந்து ரூ.284.30 என்ற உச்சத்தை தொட்டது. இதற்கு முக்கிய காரணம் சென்செக்ஸ் பட்டியலில் சோமேட்டோ நிறுவனம் இணைக்கப்படுவதுதான். இந்த முக்கியமான நகர்வு, சோமேட்டோ நிறுவனத்தின் மீது அதிகப்படியான புதிய முதலீட்டை கொண்டு வந்துள்ளது. ஆனாலும் அதன் 52 வார உயர்வான 298.20 ரூபாய் அளவீட்டை இன்னும் எட்டவில்லை.
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை முதல் அதிரடியாக 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், 1.40 மணிக்கு 788.51 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 79,903 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை நிர்வாகம் செய்யும் ஏசியா இன்டெக்ஸ் பிரைவேட் லிமெட்ட் நிறுவனம் சென்செக்ஸ் மட்டும் அல்லாமல் பிஎஸ்ஈ 1000, பிஎஸ்ஈ சென்செக்ஸ் 50, பிஎஸ்ஈ சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 ஆகிய குறியீடுகளை நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு அடிப்படையில் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டிசம்பர் 23, 2024 முதல் சென்செக்ஸ் பட்டியலில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீலை நீக்கி சோமேட்டோவை சேர்க்க முடிவு செய்துள்ளது.
இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் உலகளவில் அனைத்து பங்குச்சந்தையிலும் இதுப்போன்ற மாற்றங்கள் அவ்வப்போது நடக்கும். இந்த குறியீடுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் என பெரும் தலைகள் முதலீடு செய்ய முக்கிய காரணமாக இருக்கும். இதன் அடிப்படையில் தான் சென்செக்ஸ் குறியீட்டில் சோமேட்டோ சேர்ப்பதாக அறிவித்த பின்னர் சோமேட்டோ பங்குகள் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில், சோமேட்டோவின் பங்குகள் 130% அதிகரித்துள்ளது, இதே காலக்கட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 20% மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டை விட்டு வெளியேறும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் இக்காலக்கட்டத்தில் 27% லாபம் ஈட்டியுள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் சோமேட்டோ மட்டும் அல்லாமல், பல நிறுவனங்கள் பல்வேறு பிஎஸ்இ பட்டியல்களில் சேர்க்கப்பட உள்ளன. உதாரணமா ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், சூஸ்லான் எனர்ஜி, அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், சம்வார்தன மோதர்சன் மற்றும் பிபி ஃபின்டெக் ஆகியவை பிஎஸ்இ 100 பட்டியலில் சேர்க்கப்படும். அதே நேரத்தில், HDFC லைஃப், BPCL மற்றும் LTI மைண்ட்ரீ பிஎஸ்இ சென்செக்ஸ் 50 பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சோமேட்டோ, ஜியோ ஃபைனான்சியல் மற்றும் HAL சேர்க்கப்படும்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சோமேட்டோவின் நிகர லாபம் 389% அதிகரித்து ரூ.176 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் நிறுவனம் ரூ.36 கோடி நிகர லாபம் ஈட்டியது. இந்த அதிரடியான வளர்ச்சி மற்றும் சென்செக்ஸ் இணைப்பு ஆகியவை நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயரும் என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
சோமேட்டோ பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 130 சதவீதம் வளர்ச்சி அடைந்ததே பெரும் ஜாக்பாட் ஆக பார்க்கப்படும் வேளையில், தற்போது சென்செக்ஸ் குறியீட்டில் இணைக்கப்படுவது 2வது பெரிய ஜாக்பாட் ஆக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications