மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன் அமைத்து அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கான சம்பள உயர்வும், ஓய்வூதிய உயர்வும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரியிலேயே புது சம்பளம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷனையே அரசு தாமதமாக தான் நியமனம் செய்தது. இந்நிலையில் சம்பள கமிஷன் அறிக்கை சமர்ப்பிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய அரசு தெளிவான பதிலை அளித்துள்ளது.

இதன்படி, நவம்பர் 3, 2025 அன்று நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது என்றும், இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் இந்த சம்பள கமிஷன் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசு நியமித்த காலக்கெடுப்படி மே 2027 வரை சம்பள கமிஷன் பரிந்துரைகளை வழங்க அவகாசம் தரப்பட்டுள்ளது. இதில் , பரிந்துரைக்கப்பட்ட 18 மாத காலக்கெடுவிற்கு முன்பாகவே அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என மாநிலங்களவை உறுப்பினர் நீரஜ் சேகர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, சம்பள கமிஷன் குழு தனது பரிந்துரைகளை அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளார். அதே சமயம், 18 மாத காலக்கெடுவிற்கு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பதற்கான எந்தவொரு குறிப்பிட்ட தேதியையோ அல்லது உறுதிமொழியையோ அரசு நிர்ணயம் செய்யவில்லை. மேலும், தற்போது வரை ஊதிய குழு தனது எந்த ஒரு பரிந்துரையையும் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே சம்பள கமிஷன் அதற்கான காலக்கெடுவுக்குள் பரிந்துரையை வழங்கும். சம்பள கமிஷன் பரிந்துரைகள் சுமார் 1 கோடி அரசு ஊழியர்கல் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளத்தையும் ஓய்வூதியத்தையும் உயர்த்த போகிறது. தற்போது சம்பள கமிஷன் ஆலோசனை கட்டத்தில் உள்ளது. ஊழியர் அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பிற தரப்பினருடன் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் ஜெய்ப்பூர், சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே 8ஆவது சம்பள கமிஷன் குழு அறிக்கை சமர்ப்பிப்பு குறித்து மத்திய அரசு எந்தவொரு கூடுதல் காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் அரசு மற்றும் ஓய்வூதியதாரர்கள் மே 2027 வரை காத்திருக்க வேண்டும். ஒரு வேளை சம்பள கமிஷன் இன்னும் கூட அவகாசம் கேட்கலாம். பொதுவாக சம்பள கமிஷன் அமைக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் 2028ஆம் ஆண்டு ஜனவரியில் தான் சம்பள உயர்வே கிடைக்கும் என சொல்லப்படுகிறது. விடுபட்ட இந்த 2 ஆண்டுகளுக்கான தொகை அரியர் பணமாக வழங்கப்பட்டு விடும் என்பதால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கவலை கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications

