பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் வேலை வாங்கிவிட வேண்டும் என்பது பலரது கனவு. நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதை தாண்டி இஸ்ரோவில் வேலை செய்வதே தனி கெத்து தான். அப்படிப்பட்ட வேலையை விட்டு விட்டு சுயதொழில் தொடங்கி இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர்.
தற்போது வெற்றிகரமாக தொழில் செய்து அதனை 2 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியதோடு மட்டுமில்லாமல் , சிறந்த தலைமை பண்புக்கான உதாரணமாகவும் மாறி இருக்கிறார் உதயகுமார். Alumni Impact at Teach for India அமைப்பின் இயக்குநரான ராமபத்ரன் சுந்தரம் என்பவர் பெங்களூருவில் கால் டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் உதயகுமார் குறித்து அவருக்கு தெரிய வந்துள்ளது. கால் டாக்ஸி ஓட்டுநரிடம் பேசிய போது அவர் கன்னியாகுமரியை சேர்ந்த உதயகுமார் என்றும், இஸ்ரோவின் முன்னாள் ஊழியர் என்றும் கூறினாராம்.

இஸ்ரோ ஊழியர் கார் ஓட்டுகிறாரா என ஆர்வம் ஏற்பட்டு ராமபத்ரன் சுந்தரம் தொடர்ந்து அவரின் வேலை குறித்தும் இஸ்ரோ பணியை விட்டு கார் ஓட்டுவது ஏன் என்றும் கேட்டுள்ளார். உதயகுமார் புள்ளியியல் பிரிவில் எம்.பில் மற்றும் பிஹெச்டி முடித்தவராம்.
பின்னர் இஸ்ரோவில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. செயற்கை கோள்களை ஏவும் போது அதில் இருக்கும் திரவ எரிபொருள்களின் அடர்த்தியை துல்லியமாக கணக்கிட்டு கூறுவதே இவரது வேலை. இவர் 7 ஆண்டுகளில் இஸ்ரோவின் பல வெற்றிகரமான திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் இஸ்ரோ வேலையை விட்டு கல்லூரியில் துணை பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஆனால் அவருக்கு அந்த வேலையிலும் திருப்தி கிடைக்காததால் சுயதொழில் செய்ய முடிவெடுத்தார். அப்படி கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களின் உதவியோடு பெற்றோர் சுகுமாரன் மற்றும் துளசியின் பெயரில் எஸ்டி கேப்ஸ் (ST CABS) என்ற கால் டாக்ஸி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தற்போது எஸ்டி கேப்ஸ் நிறுவனத்தில் 37 கார்கள் உள்ளன. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. ஓட்டுநர்களின் விருப்பமான டாக்ஸி நிறுவனமாக இது இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இவரது கமிஷன் வழக்கும் முறை.
இவர் 70-30 என்ற அடிப்படையில் ஓட்டுநர்களுக்கு கமிஷன் வழங்குவாராம். அதாவது டாக்ஸிக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் 70 சதவீதம் நிறுவனத்திற்கு 30 சதவீதம் ஓட்டுநர்களுக்கு என வழங்கப்படுவதால் ஓட்டுநர்கள் தொடர்ந்து இவரிடமே பணியில் இருக்கிறார்களாம்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே ஓட்டுநராக பணிபுரியும் பலரு தாங்களாகவே வாடிக்கையாளர்களையும் அழைத்து வருவார்களாம். இப்படி அனைவரின் முயற்சியாக தான் இந்த நிறுவனம் 2 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது என இவர் தெரிவித்துள்ளார்.
சில ஓட்டுநர்கள் தங்களின் ஊதியத்தை மீண்டும் நிறுவனத்திலே முதலீடு புதிதாக கார்களை வாங்க உதவுகிறார்களாம். உதயகுமார் , வெளிமாநிலத்தில் இருந்து பெங்களூரு வந்திருக்கும் ஓட்டுநர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தங்கும் இடங்களை கூட ஏற்பாடு செய்கிறாராம்.
உதயகுமாரின் இந்த தலைமைத்துவம் மற்றும் நேர்மையான தொழில் அணுகுமுறைகள் நமக்கு நிறைய கற்று தருகின்றன என வீரபத்ரன் லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications