நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் இந்திய குடியுரிமை இல்லாத முதலீட்டாளர்கள் அதாவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அடுத்த நிதியாண்டு அதாவது ஏப்ரல் 1,2024 முதல் ஏஞ்சல் வரியை செலுத்த வேண்டும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதலில் ஏஞ்சல் வரி என்றால் என்ன என்பதை நாம் தெரிந்தும், புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஏஞ்சல் வரி என்பது ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் நியாயமான சந்தை மதிப்பைவிட அதிகமான பணத்தை திரட்டினாலோ அல்லது தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்த மதிப்பைவிட அதிக பணத்தைக் கொண்டிருந்தாலோ, அதற்கு அரசாங்கம் விதிக்கும் வரியாகும்.
இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு, நன்கு வளர்ச்சியடைந்த தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இவ்வரி பொருந்தும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும்!
ஏஞ்சல் வரி விதிப்பு /வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 56(2) (viib)ஐ பட்ஜெட்டில் திருத்தம் செய்து நிதி மசோதாவை நேற்று மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இதுவரை இந்திய குடியிருப்பாளர்களுக்கும், மாற்று முதலீட்டு நிதிகளாக (AIFs) பதிவு செய்யப்படாத நிதிகளுக்கும் விதிக்கப்பட்ட ஏஞ்சல் வரி இனி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட மூலதனத்திற்கு இந்தவரி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
வரி விதிப்பின் நோக்கம்!
இந்த வரிவிதிப்பின் புதிய பிரிவை அறிமுகப்படுத்தியதன் நோக்கமே நியாயமான சந்தை மதிப்பை விட அதிக அளவு பணம் கொண்டிருத்தல், நிறுவனத்தின் பங்குகளின் சந்தா மூலம் கணக்கில் காட்டப்படாத பணத்தை உருவாக்குவதையும் அதைப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்காகவே என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
ஸ்டார்ட்-அப்!
இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சல் வரியை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகப்படியான முதலீட்டை பெற்றால் 30% வரியை விதித்தது.
வரி விலக்கு
இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பை (FMV) விட அதிகமாக இருப்பின் 20% அல்லது அதற்கு மேற்பட்ட விகிதத்தில் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சிக்கல்!
இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவே முதலீட்டு ஆதாரங்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்டி நிறுவனங்களை தொடங்குகின்றனர். ஏற்கனவே நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் விதியை குறைக்க வலியுறுத்தி வந்த நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இவ்விதி அமல்படுத்தவுள்ளதால், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications