சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பேங்க் ஆஃப் பரோடா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்கள் எளிதாக கடன் பெற உதவிகரமாக இருக்கும் 2 திட்டத்தை வங்கி தொடங்கியுள்ளது. இந்த 2 திட்டங்களுமே பெண் தொழில்முனைவோருக்காக வழங்கப்படும் திட்டங்கள் ஆகும். தங்களுடைய தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் இதன் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.
பரோடா மகிளா ஸ்வாவலம்பன் திட்டம்: பரோடா மகிளா ஸ்வாவலம்பன் திட்டத்தின் கீழ் 9.15 சதவீதம் முதல் கடன் வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 7.5 கோடி வரையிலான கடன்களைப் பெறலாம். ரூ.5 கோடி வரையிலான கடன்களுக்கு, குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கிரெடிட் கியாரண்டி ஃபண்ட் அறக்கட்டளையின் உத்தரவாதம் இருந்தால் எந்தவித பிணையமும் இல்லாமல் கடன் பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் செயலாக்க கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் அதிகபட்சமாக 120 மாத காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறைந்தபட்சம் 51% பெண்களுக்குச் சொந்தமான உத்யம் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்த நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
உத்யம் பதிவு என்பது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களை அரசாங்கத்தில் பதிவு செய்யும் ஒரு செயல்முறையாகும். இதன் மூலம் அரசு சில கொள்கைகளை வகுக்கிறது. உத்யம் போர்ட்டலில் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலமாக தொழில்முனைவோர் எளிதில் பதிவு செய்யலாம்.
பரோடா ஸ்மார்ட் OD: இந்தத் திட்டம் ஜிஎஸ்டி-பதிவு செய்யப்பட்ட MSME-களுக்கான டிஜிட்டல் ஓவர் டிராஃப்ட் வசதி ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஜிஎஸ்டி வருமானம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் ஆகியவற்றை கொண்டு ரூ. 50,000 முதல் ரூ.25 லட்சம் வரையிலான லோன் பெறலாம். இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படும். அதோடு 12 மாத காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் செயலாக்க கட்டணங்களுக்கு முந்தைய திட்டத்தைப் போலவே தள்ளுபடி கிடைக்கும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 10% முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
சாமானிய மக்களை பெரும் தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் முத்ரா கடன்களை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களை எந்தவிதப் பினையமும் இல்லாமல் பெறலாம். இதன் கீழ் ஷிஷு, கிஷோர் மற்றும் தருண் என மூன்று பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
அதைப்போலவே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவும் சென்ட் கல்யாணி என்ற பெயரில் எந்தவித செயலாக்கு கட்டணமும் இல்லாமல் 8.70% முதல் 8.95 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1 கோடி வரையிலான கடன்களை பெற முடியும். ஒவ்வொரு வங்கியும் தொழில் முனைவோருக்கான பிரத்தியேக கடன்களை வழங்கி வருகிறது. தொழிலை விரிவு படுத்த திட்டமிடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வங்கியை தேர்வு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications