மேற்காசிய போர் சூழல் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் நாடு முழுவதுமே ஒரு பதட்டமான சூழல் தான் காணப்பட்டது. ஏனெனில் வணிக ரீதியிலான சிலிண்டர் டெலிவரியை திடீரென எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. இதனால் உணவகங்கள் தேநீர் கடைகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
பல இடங்களில் தேநீர் கடைகள் மூடப்பட்டன, உணவகங்களும் குறைந்த உணவுகளோடு செயல்படுகின்றன. பல்வேறு இடங்களிலும் டீ , காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என அஞ்சி ஏராளமான மக்கள் போட்டி போட்டுக் கொண்டு சிலிண்டரை முன்பதிவு செய்தனர். இதனால் இண்டேன் போன்ற நிறுவனங்களின் முன்பதிவு அமைப்புகளே முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

எனவே மத்திய அரசு எஸ்மா சட்டத்தை நடைமுறைப்படுத்தியது, வீட்டு உபயோக பயன்பாடு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. அதே போல உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கவும் ஆணையிட்டது. அது ஒருபுறம் இருக்க வேறு வழிகளில் இந்தியாவிற்கு எல்பிஜி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. அந்த வகையில் முதல் கட்டமாக ஈரானின் அனுமதி பெற்று இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியா கொண்டுவரப்பட்டன.
இந்த எல்பிஜி இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யாது இதனால் மத்திய அரசு அமெரிக்காவிடமிருந்து அதிக அளவு எல்பிஜி கொள்முதல் செய்ய முடிவு செய்தது. அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் இருந்து எல்பிஜி ஏற்றி வந்த பிக்சர்ஸ் பயனீர் என்ற கப்பல் மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. இந்த எல்பிஜி மூலம் ஓரளவுக்கு தட்டுப்பாட்டை தீர்க்க முடியும். இருந்தாலும் உற்பத்தி ஆலைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கு 100 சதவீத எல்பிஜி விநியோகம் செய்ய முடியுமா என்பது கேள்வி தான்.
எனவே தான் மத்திய அரசு அமெரிக்காவில் இருந்து எல்பிஜி கொள்முதலை அதிகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய வளைகுடா சப்ளையர்களை விட அமெரிக்க நிறுவனங்களிடம் அதிக ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கிடையே வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஒதுக்கீட்டை கூடுதலாக 20 % உயர்த்தி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் மார்ச் 23 ஆம் தேதியில் இருந்து கூடுதலாக 20 % அதாவது 50 % வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஒதுக்கீடு செய்யலாம் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறது. ஹோட்டல்கள், தொழிற்சாலை கேண்டீன்க, உணவகங்கள், சமூக சமையல் கூடங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications