இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலர் சுயதொழில் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் தொழில் தொடங்காமல் இருப்பதற்கான முக்கியக் காரணமாக அமைவது, அவர்களிடம் போதுமான முதலீடு இல்லை என்பதால் தான். இதைக் கருத்தில் கொண்டு அரசு சார்பில் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், "பிரதான் மந்திரி முத்ரா யோஜனா" என்ற திட்டம் இந்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சாமானிய மக்களும் தொழில் தொடங்குவதற்காகக் கடன் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?, எவ்வாறு கடன் பெறுவது என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

இந்திய அரசின் "பிரதான் மந்திரி முத்ரா யோஜனா" திட்டத்தின் மூலம் அரசு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக சிறு வணிகர்கள் மற்றும் புதிய தொழிலைத் தொடங்கும் இளம் தொழில்முனைவோர் எளிதாகக் கடன் பெற முடியும். தொழில் முனைவோரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படுகிறது.
கடன் தொகை: இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்தத் தொகை ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
கடன் வகைகள்: முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 3 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. அவை சிஷு, கிஷோர் மற்றும் தருண் என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிஷு வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 50,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. கிஷோர் வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ.50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. தருண் வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. தருண் வகையின் கீழ் 20 லட்சம் கடன் என்பது அனைவருக்கும் கிடையாது.

முதல்முறையாக கடன் பெற்று அதை ஒருவர் சிறப்பாக செலுத்தி இருந்தால் மீண்டும் கடன் பெறும்போது ரூ. 20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த அறிவிப்பு 2024-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை: முத்ரா யோஜனா திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கு அருகில் இருக்கும் வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அல்லது மைக்ரோ பைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன்(MFI) கிளைகளில் விண்ணப்பிக்கலாம்.
முத்ரா யோஜனா திட்டத்தைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி, வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். அது மட்டுமில்லாமல், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். தேவைப்படுபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் கடன் கிடைக்கும்?: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களோ விவசாயம் செய்பவர்களோ பயன்பெற முடியாது. ஏனெனில் விவசாயம் செய்பவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதால், இந்த கடன்கள் முற்றிலும் சிறு குறு தொழில் தொடங்குபவர்களுக்கானது.


Click it and Unblock the Notifications