சென்னை: தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் தொழில் தொடங்க மூலதனம் இல்லை என தவிப்பவர்களுக்காகவே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அப்படி ஒரு திட்டம் குறித்து தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Ministers Employment Generation Programme PMEGP) மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் ஆகும்.

ஊரக மற்றும் நகர் பகுதிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உருவாக்க விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். அதன் அடிப்படையில் சிறு , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணையமான KVIC மூலம் இத்திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. அதே போல மாநில கதா் மற்றும் கிராம தொழில் வாரியமான KVIB மற்றும் மாவட்ட தொழில் மையமான DIC மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கிராம மற்றும் நகா்ப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்குவோர் இந்த திட்டத்தில் மானியத்துடன் கூடிய கடன் வாங்கலாம். உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையும், சேவை துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையும் திட்ட மதிப்பீடு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் வங்கிக் கடன் பெற முடியும்.
இந்த திட்டத்தில் இணைய தகுதிகள்: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். ரூ.10 இலட்சத்திற்கு மேல் உற்பத்தி தொழில்கள் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கு மேல் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இதில் கணக்கில் கொள்ளப்படாது என்பதால் அனைவரும் தகுதி உடையவர்கள்.
இந்த திட்டத்தில் தொடங்கப்படும் தொழிலுக்கு பொதுப்பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு, சிறப்புப் பிரிவினருக்கான (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்) மூலதனப் பங்கு 5 விழுக்காடு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புறத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடும், ஊரக பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 35 விழுக்காடும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க முடியும். புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இதில் கடன் கிடைக்கும்.
சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களும், இதில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். www.kviconline.gov.in இணையதளத்திலேயே எப்படி விண்ணப்பம் செய்வது, அதற்கு திட்ட மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications