பெங்களூர்: இந்தியாவில் தற்போது மளிகை சாமான்கள், உணவு உள்ளிட்டவை எப்படி நாம் ஆர்டர் செய்த ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படுகிறதோ அதேபோல ஆடைகளையும் டெலிவரி செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட் அப் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் எந்தொரு புதிய டிஜிட்டல் சேவையை அறிமுகம் செய்வதற்கும் ஏற்ற இடமாக உள்ளது.
Slikk என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் செயலி வடிவில் இயங்குகிறது. ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட செயலிகளில் நமக்கு பிடித்த உணவு, தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை நாம் வீட்டில் இருந்த படியே ஆர்டர் செய்தால், குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு கிடைத்துவிடுகிறது. அதே நடைமுறை தான் இந்த செயலியிலும் பின்பற்றப்படுகிறது.

Slikk செயலியில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஆடைகளை ஆர்டர் செய்து 60 நிமிடங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை எளிமைப்படுத்துவது மற்றும் வேகப்படுத்துவது என்ற நோக்கத்தில் இப்படி ஒரு செயலியை உருவாக்கியதாக இதனை நிறுவிய அக்சய் குலாட்டி தெரிவிக்கிறார். வேகமாக இயங்கும் நவீன யுகத்தினருக்கான ஷாப்பிங் செயலி என இந்த செயலியை இவர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அக்சய் குலாட்டி தான் இதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார். இவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் யுனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்றவர். பின்னர் அமேசான் நிறுவனத்தில் ப்ரோக்ராம் மேனேஜராக செயல்பட்டு வந்தவர். அண்மையில் தான் இவர் Slikk செயலியை பெங்களூரில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
Slikk செயலியின் மற்றொரு தனித்துவம் நாம் ஆடைகளை வீட்டிற்கு வரவழைத்து அணிந்து பார்த்து தேவைப்பட்டால் வாங்கலாம் இல்லையெனில் திரும்ப வழங்கிவிடலாம். இதற்காக நாம் ஆடையை ஆன்லைனில் தேர்வு செய்துவிட வேண்டும், இந்நிறுவனம் டெலிவரி பார்ட்னர்கள் நமது வீட்டிற்கு டெலிவரி செய்து சிறிது நேரம் காத்திருப்பார்கள். நாம் ஆடையை அணிந்து பார்த்து தேவையெனில் வாங்கி கொள்ளலாம். இதற்காக தற்போது 50 ரூபாயை இவர்கள் கட்டணமாக வசூல் செய்கின்றனர்.
நவீன இளைஞர்கள் தான் தங்களின் இலக்கு என அக்சய் குலாட்டி கூறுகிறார். இந்த நிறுவனம் முதல் கட்டமாக மூன்று லட்சம் டாலர்கள் நிதியை திரட்டி உள்ளது. சுமார் 100 பிராண்டுகளுக்கு சொந்தமான ஆடைகளை இந்த நவீன முறையில் டெலிவரி செய்ய தொடங்கியுள்ளனர். பெங்களூரில் 70 சதவீத பகுதிகளுக்கு இவர்கள் ஆடைகளை டெலிவரி செய்வதாக கூறுகின்றனர்.
கூடிய விரைவில் இதனை 100% என விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.துணிமணி மட்டும் இல்லாமல் அழகு சாதன பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் Slikk செயலியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications