9 டூ 5 ஜாப் செல்லும் பலர் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற யோசனையில் தான் இருப்பார்கள். ஏன் தொழில் தொடங்குவதற்கான ஆகச்சிறந்த திட்டமும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை தொடங்குவதற்கான பணம் மட்டும் இருக்காது. இதனால் தான் பலர் இன்னமும் தொழில் தொடங்குவதை விடுத்து பிறருக்காக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். வங்கிகளில் சென்று கடன் பெற வேண்டுமானாலும் அதற்கு பிணயமாக எதையாவது வழங்க வேண்டும். தங்கம், சொத்து பத்திரம், வீட்டு பத்திரம் போன்றவற்றை வழங்கினால் தான் கடன் தருவார்கள். ஆனால் மத்திய அரசு சாமானியர்களையும் தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதற்காகவே எந்தவித பிணையமும் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா: இந்த திட்டத்தினை முத்ரா கடன் திட்டம் என்றும் அழைப்பார்கள். சிறு, குறு தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன் கிடைக்கிறது. முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற வேண்டுமானால் அதற்கு நீங்கள் நகை, வீடு, நிலம் போன்ற எதையும் பிணையமாக வழங்கத் தேவையில்லை.
இந்த திட்டம் முழுக்க முழுக்க அரசு வழங்கும் திட்டமாகும். வர்த்தகத் துறை, உற்பத்தி துறை, மற்றும் சேவை துறைகளில் சிறு வணிகம் தொடங்க விரும்பும் நபர்களுக்காகவே பிரத்தியேகமாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது. சிஷு, கிஷோர், தருண் மற்றும் தருண் பிளஸ் என்ற 4 பிரிவுகளில் கடன் பெற முடியும்.

சிஷு பிரிவின் கீழ் சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வரை கடன் பெறலாம். கிஷோர் பிரிவின் கீழ் ஏற்கனவே தொழில் தொடங்கி வளர்ந்து வரும் வணிகங்களுக்காக ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம், அடுத்ததாக தருண் பிரிவின் கீழ் ஓரளவு நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் வணிக உரிமையாளர்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம், கடைசியாக தருண் பிளஸ்.. இதற்கு முன்பு தருண் திட்டத்தின் கீழ் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தி இருந்தால் அதன் பிறகு தருண் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: முத்ரா கடன் பெறுவதற்கு தனி நபர்கள், வணிக நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக சிறு கடை வைத்து நடத்தும் உரிமையாளர்கள், ரிப்பேர் ஷாப் வைத்திருப்பவர்கள், உணவு பதப்படுத்தும் தொழில் செய்பர்கள், உணவகம் நடத்துபவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் முத்ரா திட்டத்தில் எளிதாகக் கடன் பெறலாம். அதோடு கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் முத்ரா கடன் கிடைக்கிறது.
முத்ரா கடன் பெற விண்ணப்பதாரர் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற்று இஎம்ஐ செலுத்துபவராக இருக்கக் கூடாது. அதிகளவிலான கடன் தொகை மற்றும் சிறந்த வட்டி விகிதத்தை பெறுவதற்கு கண்டிப்பாக விண்ணப்பிப்பவரின் கிரெடிட் ஸ்கோர் 650 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இது பிணையமே இல்லாத கடனாகும். தனிநபர் அல்லது வணிக நிறுவனங்கள் இந்த கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்த விரும்பினாலும் அதற்கான ப்ராசசிங் கட்டணங்கள் எதுவுமே கிடையாது. வணிக செயல்பாடுகளுக்கு முத்ரா கடன் மூலம் பெற்ற பணத்தை எளிதாக எடுப்பதற்காக கடன் பெறும் ஒவ்வொருவருக்கும் முத்ரா கார்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி எளிதில் பணம் எடுக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி போன்றவை இதற்கு தேவைப்படும். மேலும் மின்சார கட்டண ரசீது, வணிகச் சான்றாக உத்யம் பதிவு சான்றிதழ், வணிக உரிமம்,ஜிஎஸ்டி விபரங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கிக் கணக்கு அறிக்கைகள் போன்றவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: முத்ரா கடன் பெற ஆன்லைனில் ஜன்சாமர்த் (JanSamarth) அல்லது உத்யாமிமித்ரா (UdyamiMitra) போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யலாம். அடுத்த கட்டமாக நீங்கள் எந்த பிரிவின் கீழ் கடன் பெற இருக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக சிசு ,கிஷோர், தருண், தருண் பிளஸ் ஆகிய நான்கு பிரிவுகளை முன்பே பார்த்தோம். அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய வணிக விவரங்களை எல்லாம் நிரப்பி ஸ்கேன் செய்த ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உள்ளூர் வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் கிளைக்கு சென்று நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
வட்டி விகிதங்கள்: 2015 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது கடன் வரம்பு ரூ.10 லட்சமாக மட்டுமே இருந்தது. அதன் பிறகு பட்ஜெட் அறிவிப்பில் அதிகபட்ச கடன் வரம்பை ரூ.20 லட்சமாக அரசு உயர்த்தியது. 2026 ஆம் ஆண்டில் முத்ரா கடன் பெற்றால் உங்களுடைய வணிகத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் 8.5 முதல் 18 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications