இப்பொழுதெல்லாம் ஒரு நிறுவனம் அல்லது நபரின் கீழ் வேலை செய்யும் ஆர்வம் பலரிடமும் குறைந்துவிட்டதால் சொந்த தொழிலை ஆரம்பிக்கும் ஆர்வம் மக்களிடையே மேலோங்கி உள்ளது.
கோவிட்-19 நேரத்தில் வேலைகளை விட்டு சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் பலரின் கதைகளைக் கேட்டிருப்போம். அப்படி ஒருவரின் கதையைத் தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.
சாஃப்ட்வேர் என்ஜினியர் டு விவசாயி!
புனேவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்துடன் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தவர் தான் ஷைலேஷ் மோடக். இவர் பல ஆண்டுகள் சாஃப்ட்வேர் தொழில் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளார்.
விவசாயத் துறை
ஒருகட்டத்தில் அவருக்கு வேலையைவிட சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வம் மேலோங்கி இருந்தது. அதனால் அவர் ஐடி வேலையை விட்டு சொந்தமாக தொழில் தொடங்க முயற்சி செய்துள்ளார்.
அதிலும் விவசாயத் துறையில் இயற்கையான மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையிலும் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஐடியா அவருக்கு தோன்றியது.
ஐடியா வேலை செய்யவில்லை!
ஷைலேஷ் மகரந்தச் சேர்க்கைக்காக ஒரு பண்ணையில் தேனீக்களை வாடகைக்கு எடுக்கத் தொடங்கினார். இருப்பினும், அவரது வணிக யோசனை சரியாக வேலை செய்யவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவர் விவசாயம் பற்றி நிறைய கற்றுக்கொண்டார்.
ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை
2016 ஆம் ஆண்டில், அவர் தனது வேலையை விட்டுவிட்டு முழுநேர தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் 2018 ஆம் ஆண்டு இந்த ஹைட்ரோபோனிக்ஸ் ( Hydroponics ) தோட்டக்கலை அவருக்கு சரியாக கைகொடுக்க துவங்கியது.
அதென்ன ஹைட்ரோபோனிக்ஸ்!
ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண் சார்ந்த விவசாயம் அல்லாமல் நீர் சார்ந்த கனிம ஊட்டச்சத்து கரைசல்களை நீர் கரைப்பான்களில் பயன்படுத்துவதன் மூலம் தாவரங்கள், பொதுவாக பயிர்கள் அல்லது மருத்துவ தாவரங்களை வளர்க்கும் ஒருவகை தோட்டக்கலையாகும்.
குங்குமப்பூ வளர்ப்பு!
மசாலா பொருட்களிலேயே மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றான குங்குமப்பூவை வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஷைலேஷ் மனதில் தோன்றியது. அதனைத் தொடர்ந்து அவர் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் குங்குமப்பூவை வளர்த்து, இன்று லட்சங்களில் சம்பாதித்து வருகிறார்.
ஷிப்பிங் கண்டெய்னர்
இவர் ஷிப்பிங் கண்டெய்னர்களில் பயிர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க பல்வேறு ஹைடெக் சாதனங்களைப் பயன்படுத்துவதாகவும், குறிப்பாக காஷ்மீரில் உள்ள பாம்போரில் (Pampore) இருந்து வாங்கப்பட்ட பிரீமியம் தரமான குரோக்கஸ் கார்ம்கள் / பல்புகள் (crocus corms/bulbs) மூலம் குங்குமப்பூ வளர்க்கப்பட்டதாக சைலேஷ் மோதக் தெரிவித்துள்ளார்.
யார் இந்த சைலேஷ் மோதக்!
சைலேஷ் மோதக் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவன அனுபவத்தைக் கொண்ட ஒரு ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆவார்.
365DFarms இணையதளத்தின்படி, அவர் அதிகாரப்பூர்வமாக 'காதி கிராம் உத்யோக்கின் CBRT'யின் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர் 700+ க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மாணவர்களுடன் தேனீ வளர்ப்பு மற்றும் நிலையான விவசாயம் பற்றிய அறிவை தீவிரமாக பரப்பி வருகிறார்.
இவர் தற்போது தனது ஸ்டார்ட்-அப் 365DFarms நிறுவனத்தின் ப்ரோமோட்டராக உள்ளார்.


Click it and Unblock the Notifications