மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட அரசின் நல திட்டங்களை பெறவும் இலவச அரிசி மற்றும் மானிய விலை உணவு பொருட்களை பெறவும் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது ரேஷன் கார்டு. நம் முகவரிக்கான அடையாள ஆவணமாகவும் குடும்ப வருமானத்தை நிர்ணயம் செய்து அரசின் நல திட்டங்களை பெறுவதற்கான ஆவணமாகவும் இது உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்யும் நடைமுறையில் முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு, மாவட்ட அளவில் இ-சேவை மையங்கள் மூலம் பலர் விண்ணப்பம் செய்கின்றனர். நேரடியாக ஆன்லைன் தளத்திலும் TNPDS செயலி வாயிலாகவும் விண்ணப்பம் செய்து வருகின்றனர். பொதுவாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்யும் போது அத்துடன் கண்டிப்பாக கேஸ் சிலிண்டர் இணைப்பிற்கான ரசீது வைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் விண்ணப்பதாரர்களிடம் இதனை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலானவர்கள் ரேஷன் கார்டு பெற்ற பின்னர்தான், கேஸ் சிலிண்டர் இணைப்பே பெற முடியும் என்ற நிலையில், இந்த உத்தரவால், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அரசுக்கு பலதரப்பில் இருந்தும் புகார் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதில், புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்யும் போது, கேஸ் சிலிண்டர் இணைப்பிற்கான ரசீது கட்டாயம் இல்லை. அதனை இணைக்க வேண்டும் என எந்த உத்தரவும் வெளியிடவில்லை என கூறியுள்ளார்.
அதே நேரம் விண்ணப்பத்துடன் குடும்ப உறுப்பினர் அனைவரின் ஆதார் அட்டையையும் கட்டாயம் பதிவேற்ற வேண்டும். ஆதார் அட்டையுடன் சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது, கேஸ் சிலிண்டர் ரசீது இருந்தால் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
எனவே கேஸ் சிலிண்டர் ரசீது இல்லை என்றால் கூட சொத்து வரி, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை முகவரிக்கான அடையாள ஆவணமாக காட்டலாம். ரேஷன் கார்டுக்கு தாங்களாகவே விண்ணப்பம் செய்தாலும், இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பித்தாலும் சரி அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை மற்றும் மேலே கூறிய அடையாள ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகை , முதலமைச்சர் மருத்துவ காப்பீடு போன்ற அரசின் பல்வேறு நல திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் கட்டாயம். எனவே புதிதாக திருமணமான நபர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் அனைவரும் ரேஷன் கார்டு விண்ணப்பித்து வைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அரசின் நல திட்டங்கள் கிடைக்காமல் போகலாம்.


Click it and Unblock the Notifications


