சென்னை: இந்திய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருப்பவை சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள். கிராமப்புறங்களில் தொடங்கி நகர்ப்புறங்கள் வரை நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு , உற்பத்தியை அதிகரித்து பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் 42.5 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மத்திய , மாநில அரசுகள் சிறு தொழில்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக சிறு தொழில் தொடங்குவோர் அதற்கான மூலதனத்தை கடனாக பெற பல்வேறு வழிகள் உள்ளன. சிறு நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் நடைமுறை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 20 வருடத்தில் பெரிய அளவில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கிகள் மட்டுமல்லாது சிறு நிதி நிறுவனங்களிலும் அரசு திட்டங்கள் மூலமாகவும் நாம் எளிதாக கடன் பெற்றுக் கொள்ள முடியும். கடன்களை திரும்ப செலுத்துவதற்கான வாய்ப்புகளும் நமது சூழலுக்கு ஏற்ற வகையில் நிர்ணயித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் செய்வது மற்றும் அதற்கான நடைமுறைகள் மற்ற கடன்களோடு ஒப்பிடுகையில் எளிமையானதாக இருக்கிறது. மேலும் குறுகிய காலத்திலேயே இத்தகைய கடன்களை பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்ற சிறு வணிக கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்ற கடன் விகிதங்களோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலேயே உள்ளன.
அரசு திட்டங்கள் மூலம் கடன் பெறும்போது குறிப்பிட்ட தொகை நமக்கு மானியமாகவே கிடைத்து விடுகிறது. இவ்வாறு சிறு வணிகங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் பிணையம் எதுவும் இன்றி வழங்கப்படுவதால் எளிதாக நாம் இத்தகைய கடன்களை பெற்று தொழில் தொடங்க முடியும்.
அரசு திட்டங்கள் : மத்திய அரசு சிறு தொழில்களுக்கான கடன்களை வழங்குவதற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக முத்ரா கடன்கள் , ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் பல்வேறு சிறு தொழில்களுக்கும் உடனடியாக கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய கடன்களுக்கு வட்டி விகிதங்கள் குறைவு என்பதோடு அரசும் இதில் குறிப்பிட்ட தொகையை மானியமாக செலுத்தி விடுகிறது. மேலும் இத்தகைய கடன்களுக்கு பிணயம் எதுவும் தேவைப்படுவதில்லை.
மைக்ரோ கடன்கள்: சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் வழங்க கூடிய கடன்கள் மைக்ரோ கடன்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுத்துறை, தனியார் வங்கிகளில் கடன் கிடைக்காத நபர்கள் கூட சுய தொழில் தொடங்குவதற்காக இத்தகைய நிதி நிறுவனங்களில் எளிதான முறையில் கடன்களை பெற முடியும். இவ்வாறு வழங்கப்படும் கடன் தொகை சிறியதாக இருக்கும் மேலும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமும் குறைவானதாக இருக்கும்.
அன்றாட பணிகளுக்கான கடன்: சிறுவணிகங்கள் தங்களது அன்றாட செயல்பாட்டு செலவுகளை ஈடு கட்டுவதற்காக இவ்வகை கடன்கள் வழங்கப்படுகின்றன. சம்பளம் மற்றும் சரக்குகளை கையாளுவது போன்ற நோக்கங்களுக்காக இவை வழங்கப்படுகின்றன. சிறு தொழில்கள் சீரான பணப்புழக்க சுழற்சியை பராமரிப்பதற்கு இத்தகைய கடன்கள் உதவுகின்றன.
காலக்கடன்கள்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்கள் இவை. உபகரணங்கள் வாங்குவது அல்லது தங்களுடைய தொழிலை விரிவுபடுத்துவது போன்ற நீண்ட கால முதலீடுகளுக்கு மூலதனம் தேவைப்படும்போது சிறு வணிகங்கள் இத்தகைய காலக்கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.
உபகரண கடன்கள்: சுயதொழில் செய்வோர் தங்கள் தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் அல்லது உபகரணங்களை வாங்குவது அல்லது குத்தகைக்கு எடுப்பது போன்ற செலவுகளுக்காக இத்தகைய கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications