தெலுங்கானா: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தங்களிடம் பார்ட்னர்களாக சேர்ந்து பணிபுரிபவர்களிடம் "ஸ்விக்கி கிட்" வழங்குவதற்காக 1199 ரூபாயை வசூலிப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த பல்வேறு ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்களும் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதாவது ஸ்விக்கி நிறுவனம் தங்களிடம் டெலிவரி பாட்னர்களாக இணைந்து பணிபுரிபவர்களுக்கு ஸ்விக்கி பெயர் அச்சிடப்பட்ட டி ஷர்ட், பை மற்றும் ரெயின் கோட் ஆகியவை கொண்ட கிட் ஒன்றை வழங்குகிறது. இவை அனைத்திலும் ஸ்விக்கியின் பெயர் இடம்பெற்றிருக்கும்.

இதற்காக டெலிவரி பார்ட்னர்கள் 1199 ரூபாய் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் யூனியன் (Gig and Platform Workers Union) உங்களது பிராண்ட் பெயரைக் கொண்ட பை, ரெயின் கோட் மற்றும் டீ சர்ட் மூலம் உங்களுக்கு விளம்பரம் தானே கிடைக்கிறது, அதற்காக எதற்கு நீங்கள் பணியாளர்களிடம் பணத்தை வசூல் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.
அது மட்டும் இன்றி ஒரு புகைப்படத்தையும் அந்த யூனியன் பகிர்ந்துள்ளது, அதாவது ரெயின் கோட் மற்றும் பை ஆகியவற்றுக்கு தள்ளுபடி அனைத்தும் போக மொத்தமாக 899 ரூபாய் தான் ஆகிறது. ஆனால் நீங்கள் 1199 ரூபாய் வசூல் செய்கிறீர்கள் எனக் கூறியுள்ளது. மேலும் ஸ்விக்கி நிறுவனம் தங்களுடைய பையனை பயன்படுத்தவில்லை எனில் டெலிவரி பார்ட்னர்களுக்கு அபராதம் விதிக்கிறதாம்.
இந்த பை சேதமடைந்தால் டெலிவரி பார்ட்னர்கள் மீண்டும் புதிதாக கட்டணத்தை செலுத்தி புதிய பையை வாங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்களாம்.
யூனியனின் இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ஸ்விக்கி நிறுவனம் ஏன் டெலிவரி பார்ட்னர்களிடம் இதற்காக பணம் வசூலிக்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்விக்கி நிறுவனமே அவர்களுக்கு பை மற்றும் டீ-ஷர்ட் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து 1199 ரூபாயை வசூலிப்பது கொடுமையானது என ஒரு பயனாளர் பதிவிட்டுள்ளார்.
சிலர் ஸ்விக்கிக்கு ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளனர், ஒருவேளை இலவசமான பை , டீசர்ட் உள்ளிட்டவற்றை வாங்கியவர்கள் உடனே வேலையை விட்டு நின்று விட்டால் என்ன செய்வது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சில பயனாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டெலிவரியை கடந்த பிறகு ஸ்விக்கி நிறுவனம் டெலிவரி பார்ட்னர்களுக்கு பை, டீ சர்ட் உள்ளிட்டவற்றுக்கு வசூலித்த தொகையை திருப்பி தந்துவிடலாமே என யோசனை கூறியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications