தமிழ்நாட்டை தலைமையிடமான கொண்டு செயல்படும் பன்னாட்டு ஐடி நிறுவனமான சோஹோ (Zoho), இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐ தான் காரணம் என விளக்கம் தந்துள்ளது சோஹோ நிறுவனம்.
சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார். அதில் சோஹோ நிறுவனம் எப்போதும் தனது ஊழியர்களுக்கு தவறாமல் வழங்கி வரும் வருடாந்திர ஊதிய உயர்வை இந்த ஆண்டு தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைத்துள்ளது என கூறியுள்ளார். தவிர்க்க முடியாத இந்த முடிவுக்கு ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் தற்போதைய சூழலை புரிந்துகொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாக இருக்கும் ஊழியர்களுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.

மென்பொருள் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் மந்தமாகவும் சவாலாகவும் இருக்கும் என கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு பெரிய அளவில் ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவதை தவிர்க்க நிறுவனம் முழு மூச்சுடன் செயல்படும் என உறுதியளித்துள்ளார். சோஹோ நிறுவனம் கடந்த 18 மாதங்களாகவே தனது நிறுவனத்தில் புதிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்பதையும் வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் மந்தநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகள் பலமடங்கு உயர்ந்துள்ளதாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். டேட்டா சென்டர்களுக்கு தேவையான சர்வர்களின் விலை சுமார் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். ஏஐ கருவிகளின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டு செலவுகள் நிறுவனத்தின் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன. இந்த செலவுகளை கட்டுப்படுத்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்ந்து வரும் செலவினங்களை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சோஹோ நிறுவனம் தனது விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் செலவினங்களை பெருமளவில் குறைத்து கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்ப செலவுகளுடன் சேர்த்து, உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களும் மற்றும் மென்பொருள் வணிகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் நிறுவனத்தின் நிதிநிலைமையை மேலும் கடினமாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்றும் முடிந்த வரை பணிநீக்கத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது சோஹோ தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் ஒரு கடினமான காலகட்டத்தில் பயணித்து வருவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இந்த முயற்சி எந்தளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள காலக்கட்டமே தீர்மானிக்கும் என்றும், இதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெக் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் ஊழியர்களுக்கு பணிநீக்கம் போன்ற சவால்கள் இருக்கிறது என்ரால் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளையே ஏஐ-க்கு ஏற்ப தகவமைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சவாலான சூழல் உண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

