ஒரு வீடு விற்பனை செய்யும் போது, முக்கியமான செலவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், ஒரு நுகர்வோர் ரூ.1.87 லட்சம் வரை வரியை அதிகமாக செலுத்த நேரிடுவதாகவும், இந்த தவறை இந்தியாவில் ஆயிரக்கணக்கான வீடு விற்பவர்களிடையே நடந்துகொண்டிருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
TaxBuddy.com நிறுவனத் தலைவர் சுஜித் பங்கர், லிங்க்ட்இனில் இந்த விவரத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு நுகர்வோர், ரூ.1.2 கோடிக்கு வீடு விற்றபோது, அதன் மீது செலுத்த வேண்டிய மூலதன வரியை கணக்கிடும்போது, வீடு வாங்கிய விலையான ரூ.80 லட்சம் மட்டும் கழித்தார். ஆனால், சட்டப்படி கழிக்கக்கூடிய பிற செலவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சுஜித் பங்கர் கூறுகையில், இதுபோன்ற தவறுகள் மிகவும் பொதுவானவை என்றும் ஆனால் அதன் தாக்கம் பண இழப்பாகவும், சட்டப்பூர்வ இழப்பாகவும் இருக்கலாம்" என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, ஒரு வீட்டை விற்ற பிறகு அதில் இருந்து பெறப்படும் லாபத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வருமான வரி சட்டம் சில தகுதியுள்ள செலவுகளை விலக்காகக் காட்டி, வரி செலுத்த வேண்டிய லாபத் தொகையை குறைத்துக் கொள்ளலாம்.
என்னென்ன செலவுகளை விலக்காகக் காட்டலாம்..?: நீங்கள் வீட்டை வாங்கும் போது செலுத்திய ஸ்டாம்ப் டூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், வீடு வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ தரகர்/புரோக்கருக்கு கொடுத்த தொகை, புதுப்பிப்பு, விரிவாக்கம், structural renovation போன்றவை, வீட்டை வாங்கும் அல்லது விற்கும் போது செய்த சட்ட ஆலோசனை மற்றும் ஆவணங்களுக்கான செலவுகள், Section 24(b) கீழ் ஏற்கனவே tax deduction எடுத்திராத வீட்டு கடன் வட்டியையும் கழித்துக் கொள்ளலாம்.
இந்த செலவுகளை சரியாக கணக்கில் எடுத்தால், மூலதன லாபம் குறைவாகக் கணக்கிடப்படும். அதன் அடிப்படையில் வரி தொகையும் குறையும். இந்த செலவுகளுக்கான ரசீதுகள்/ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். கணக்கீட்டில் தவறு இருந்தால் அதிக வரி செலுத்தும் அபாயம் உள்ளது.
இந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், வீடு விற்ற நபர் கீழ்க்கண்ட செலவுகளை வரிக் கணக்கில் சேர்க்க மறந்திருந்தால், அவருக்கான வரி தொகை மிக மிக அதிகமாகி இருக்கலாம். பதிவுக் கட்டணம் ரூ.4.7 லட்சம், வீடு மறுசீரமைப்புகள் ரூ.6 லட்சம், வீட்டு கடனுக்கான வட்டி ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.13.7 லட்சம் செலவுகள் என வருமான வரி சட்டத்தில் உள்ள வகைகளில் சேர்த்திருக்கலாம்.
ஆனால், அவை தவறவிடப்பட்டிருந்தால், வரி கணக்கில் லாபம் அதிகமாகக் காட்டப்பட்டு, பலர் வேண்டாமலேயே இலாபத்திற்கு அதிக வரி செலுத்தும் நிலைக்கு செல்ல நேரிடும். இவை எல்லாம் தவிர்க்க, சரியான ஆவணங்கள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
இந்நிலையில், TaxBuddy.com நிறுவனர் சுஜித் பங்கர், வீடு விற்பவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். குழாய் சரிசெய்தல், சுவர் பூச்சு போடுதல் போன்றவை வரி கணக்கில் கழிக்க முடியாது. மாடுலர் கிச்சன் அமைத்தல், கூடுதல் மாடி கட்டுதல் வரி கணக்கில் கழிக்கக்கூடிய செலவுகள். அதற்கான பில், ரசீது இருந்தால் மட்டுமே இது சாத்தியம். வருமான வரித்துறை தற்போது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி செலவுகளை கண்டுபிடிக்கிறது. எனவே, உண்மையான செலவுகளை மட்டுமே கணக்கில் எடுத்து, அதற்கான ஆவணங்களை சரியாக வைத்திருப்பதே பாதுகாப்பான வழி.


Click it and Unblock the Notifications