ஒரு காலத்தில் இன்ஜினியரிங் என்றால் அவ்வளவு மரியாதை. இன்ஜினியரிங் படித்த மாப்பிள்ளைக்கு தான் பெண் கொடுப்போம் என்றிருந்த குடும்பங்கள் அதிகம். ஆனால் இப்போது தெருவுக்கு ஒரு இன்ஜினியர்.. ஏன் வீட்டிற்கு ஒரு இன்ஜினியர் வந்து விட்டனர். இதனால் பொறியியல் துறை தொடர்ந்து உச்சத்தை அடைந்தது. 2025 ஆம் ஆண்டில் TNEA கவுன்சிலிங்கில் சுமார் 81 சதவீத இன்ஜினியரிங் சீட் நிரப்பப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்தது. ஆனால் 2026-ஆம் ஆண்டில் நிலமை தலைகீழாக மாறியுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடந்து முடிந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மொத்தமாக காலியாக இருந்த 1,81,436 இன்ஜினியரிங் இடங்களில் வெறும் 41.15 சதவீதம் மட்டுமே இதுவரையில் நிரப்பப்பட்டுள்ளன.
கடந்த 2025-ஆம் ஆண்டில் இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு 46.34% இடங்கள் நிரம்பியிருந்தன. ஆனால் இந்த ஆண்டு இந்த விகிதம் குறைந்துள்ளது. தற்போது இரண்டாம் சுற்றுக்குப் பின்னும் நிரப்பப்படாத இடங்கள் 1,06,778-ஐ எட்டியுள்ளன. இது சுமார் 58.85 சதவீதமாகும்.

இன்ஜினியரிங் கல்லூரிகள் குறித்த நிலவரம்: ஒரு சில கல்லூரிகளில் முழுமையாக அனைத்து சீட்களும் நிரம்பியுள்ளன. ஆனால் ஒரு சில கல்லூரிகளில் 90 சதவீதத்திற்கும் மேலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. ஆனால் ஒரு சில கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
சுமார் 422 கல்லூரிகளை ஆய்வு செய்ததில்.. 7 கல்லூரிகளில் முழுமையாக அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 44 கல்லூரிகளில் 90 சதவீதத்திற்கும் மேலான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 167 கல்லூரிகளில் 10% குறைவான மாணவர்களே தேர்ந்தெடுத்துள்ளனர்.
இன்னும் 23 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இன்ஜினியரிங் சீட் காலியாக இருந்தாலும்.. ஒரு சில கல்லூரிகளில் முழுமையாக சீட் காலியாகி இருப்பதிலிருந்து ஒரே ஒரு விஷயம் தெளிவாகிறது. மாணவர்கள் முன்பை விட தற்போது செலெக்ட்டிவாக கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.
முன்னணி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விபரங்கள்: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 1159 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 928 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதேபோல தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் 921 மற்றும் 2287 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜில் 1924 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த முறை மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
முக்கியமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்கை 17,524 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கை 12,000-த்திற்கும் அதிகமானோர் தேர்ந்தெடுத்துள்ளனர். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியை 6282 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த முறை EEE மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். சில கல்லூரிகளில் புதிதாக வந்த பாடப் பிரிவுகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை.
டேட்டா சயின்ஸ், ஜெனரேட்டிவ் AI, மெரைன் இன்ஜினியரிங் மற்றும் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி போன்ற சில புதிய பாடப் பிரிவுகளில் இன்னும் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இருப்பதிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் மட்டும் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதர பாடப்பிரிவுகளில் கிட்டத்தட்ட பாதி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் வேலை வாய்ப்பு பெறுவதில் கடும் போட்டி நிலவும் என்றே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
