மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்கிழமை லோக்சபாவில் சப்கா பீமா சப்கி ரக்ஷா மசோதா 2025ஐ தாக்கல் செய்தார். சப்கா பீமா சப்கி ரக்ஷா மசோதா என்றால் இன்சூரன்ஸ் துறை நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் மசோதாவாகும்.
இந்த மசோதா மூலம் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (FDI) தற்போதைய வரம்பான 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த வழிவகுக்கும். இதன் மூலம் 2047க்குள் இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் காப்பீடு வசதி கிடைக்கும் பார்வை உடன் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த ஒரு மசோதா மூலம் 1938இன் காப்பீட்டுச் சட்டம், 1956இன் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் சட்டம், 1999இன் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் ஆகியவற்றை மொத்தமாக திருத்துகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முழு உரிமையுடன் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ளவற்றை வாங்க இந்த திருத்தம் அனுமதிக்கிறது.
இதனால் இந்திய காப்பீட்டு துறையில் பெரிய அளவிலான வெளிநாட்டு மூலதனம் வரும். இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரித்து, குறைவான விலையில் அதிகப்படியான சேவை கிடைக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு காப்பீட்டு துறையில் 2000ஆம் ஆண்டில் 26 சதவீதமும், 2015ல் 49 சதவீதத்திற்கும், 2021ல் 74 சதவீதத்திற்கும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது. தற்போது இதை 100 சதவீதமாக உயர்த்தும் முயற்சிகள் நடந்து வருகிறது, இத்திட்டம் குறித்து 2025 பட்ஜெட் அறிக்கையை வாசிக்கும் போதே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் படி கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளது. இதை ஆய்வுக்கு உட்படுத்தி ஒப்புதல் பெற்று அதன் பின்பு நடைமுறைக்கு வரும்.
வெளிநாட்டு முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்பட்டாலும், உள்ளூர் கட்டுப்பாட்டை உறுதி செய்ய மசோதா ஒரு விதியை வைக்கிறது. நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் அல்லது தலைமை செயல் அதிகாரி ஆகியோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இது இந்தியாவின் கட்டுப்பாட்டை பாதுகாக்கும். காப்பீட்டு நிறுவனங்களின் முடிவெடுக்கும் பதவிகளில் இந்தியர்கள் இருப்பது உள்ளூர் மக்களின் நலனை காக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
மேலும் இந்த மசோதா, இன்சூரன்ஸ் அல்லாத நிறுவனங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைக்க அனுமதிக்கிறது. இது இத்துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு காப்பீட்டு துறையில் செய்யும் இந்த மாற்றத்தை மக்களாகிய நீங்கள் எப்படி பாக்குறீங்க, உங்க பதிலை கமெண்ட் ஆக பதிவிடவும்.


Click it and Unblock the Notifications