ஒரு நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான வாட்ஸ்அப் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் கட்டாயமாக இதில் பங்கேற்க வேண்டும் என்றும், செலவுகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வாட்ஸ்அப் உரையாடலின்படி, தீபாவளி கொண்டாட்டத்திற்காக ஊழியர்கள் ரூ.1,200 செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், மேலாளர்கள் ரூ.2,000 செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில், மதுபானங்கள் "நிறுவனச் செலவில்" வழங்கப்படும் என்றும் ஒரு ஹேஷ்டேக் மூலம் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வாட்ஸ்அப் செய்தி, "அனைவருக்கும் வணக்கம்! தீபாவளி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் 100% கட்டாயம் பங்கேற்க வேண்டும். உங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.1,200 வசூலிக்கவும். மேலாளர்களிடமிருந்து ரூ.2,000 வசூலிக்கவும். அனைவரும் ரூ.1,200 செலுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் r/IndianWorkplace எனும் ரெடிட் சமூகப் பிரிவில், "இது ஒரு நிறுவனத்திற்கு அவமானம்" என்ற தலைப்புடன் பகிரப்பட்டது. ஸ்கிரீன்ஷார்ட்டை வெளியிட்ட பயனர், "ஊழியர்களிடமிருந்து பணம் வசூலித்து, சலிப்பான விருந்தை நடத்துவதையும், இடமும் மோசமாக இருப்பதையும் நினைத்துப்பாருங்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்தச் செய்தி இணையத்தில் விரைவாகப் பரவி, பல ரெடிட் பயனர்கள் இந்தச் செய்தியின் தொனியையும், தொடர்புகளை விமர்சித்தனர். ஒரு பயனர், "நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டால், அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையிலான எல்லைகளை மங்கலாக்குகிறார்கள். வாட்ஸ்அப் தொழில்முறை உரையாடல்களுக்கானது அல்ல" என்று குறிப்பிட்டார்.
"இதைச் செய்யும் எந்த நிறுவனமும் தொழில்முறையைப் பற்றி கவலைப்படுவதில்லை, மேலும் நீங்கள் உடனடியாக விலகிச் செல்ல வேண்டும் என்பதற்கான அறிகுறி இது" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார். சில பயனர்கள் கட்டாய வருகை விதிமுறையையும் கேள்வி எழுப்பினர். இந்த நிகழ்வு ஏன் விருப்பமானதாக இல்லை என்றும், யாரேனும் பணம் செலுத்த அல்லது கலந்து கொள்ள மறுத்தால் என்ன நடக்கும் என்றும் கேட்டனர்.


Click it and Unblock the Notifications