சென்னை: தமிழகத்தில் மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகை மிக விவரிசையாக கொண்டாடப்படும். மக்கள் வாழ்வியலோடு கலந்த ஒரு பண்டிகை என்பதால் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்வார்கள். அது மட்டும் இன்றி பொங்கலையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் கிராமங்களில் நடைபெறுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி ,கரும்பு ,சர்க்கரை ஆகியவற்றோடு ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது . இந்த நிலையில் எதிர் வரக்கூடிய பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு எப்போது முதல் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என சொல்லப்படுகிறது. முதலில் எந்த தேதியில் பொங்கல் பரிசு டோக்கன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும். அந்த டோக்கனில் இருக்கும் தேதியில் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
வரும் ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகையும் ஜனவரி 14-ஆம் தேதி தை பொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. இதில் ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகைக்கு முன்னர் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை தினமாக இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாகவே பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
எனவே ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் , 10ஆம் தேதியிலிருந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது மட்டுமின்றி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி முன்கூட்டியே அந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.
வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி தான் மகளிர் உரிமைத்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி பத்தாம் தேதியே மகளிர் உரிமை தொகையானது பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என சொல்லப்படுகிறது. மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெறும் பெண்களுக்கு வரும் ஜனவரியில் பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாயும் சேர்த்து 2000 ரூபாய் கிடைக்கப் போகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications