நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. பால் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், உணவு என ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை. அந்த வகையில் மருந்து, மாத்திரைகளை கூட நாம் ஆன்லைனில் வாங்குகிறோம்.
ஆன்லைனில் மக்கள் மருந்துகளை வாங்குவதால் மருந்து விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப்களில் விற்பனை குறைந்து வருகிறது. இந்த சூழலில் முறையான பராமரிப்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஆன்லைனில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மருந்து விற்பனையாளர் சங்கம் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. எனவே மே 20-ம் தேதி அதாவது வரும் புதன்கிழமை நாடு முழுவதும் அனைத்து மருந்தகங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் உள்ள 12 லட்சம் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணற்ற நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் முன்கூட்டியே தங்களுக்கான மருந்துகளை வாங்கி வைத்து கொள்வது நல்லது.
கொரோனா தொற்று காலத்தின் போது பொதுமக்கள் யாரும் வெளியில் வர கூடாது, தொற்று பரவி விட கூடாது என்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே இயங்கி வந்தன. மேலும் மருந்துப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து விநியோகம் செய்யும் முறைக்கு மத்திய அரசு அனுமதியும் அளித்திருந்தது.
இந்த நடைமுறை இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மருந்து விற்பனையாளர் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்தது சரியாக இருந்தாலும், தற்போது ஊரடங்கு முடிந்த பிறகும் அதே நிலை தொடர்வது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என மருந்து விற்பனை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்கள் சரியான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் இன்றி நோயாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என கூறுகின்றன.
மேலும் கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மின் மருந்தக செயல்பாடு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை மறுதினம் நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
மருத்துவமனைகள், கிளீனிக்குகளில் செயல்படும் மருந்துகங்கள் வழக்கம் போல இயங்கும், எமர்ஜென்சி மருந்துகள் வழக்கம் போல கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரை காக்கும் மருந்துகளை பொறுப்புடன் செயல்பட்டு விற்பனை செய்வது தான் சிறந்தது, கடைகள் என்றால் முறையாக மருத்துவர் அளித்த மருந்து சீட்டுகளை ஆய்வு செய்து தான் மருந்து வழங்குவோம் ஆனால் ஆன்லைனில் அப்படி இல்லை, இது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருந்து கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஏஐ மூலம் மருந்து சீட்டுகளை உருவாக்கி ஆன்லைனில் பதிவேற்றி சில போதை ஏற்படுத்தும் மருந்துகளும் வாங்கி பயன்படுத்தப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

