இந்தியாவின் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளில் சேர்ந்து பெரிய படிப்புகளை படிக்க வேண்டும் என ஆசை கொண்ட பல்வேறு ஏழை மாணவர்களுக்கும் வங்கிகள் வழங்கக்கூடிய கல்வி கடன்கள் தான் மிகவும் உதவியானதாக இருக்கின்றன .
ஏழ்மையான பின்னணியை சேர்ந்த மாணவர்கள் பலரும் அரசு பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை படித்துவிடுகிறார்கள். ஆனால் அதன் பின்னர் கல்லூரிக்கு சென்று பொறியியல் போன்ற படிப்புகளை படிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த பணம் இருப்பதில்லை. இதனால் நினைத்த படிப்பை படிக்காமல் போவது அல்லது கல்வியையே விட்டுவிடுவது என்ற சூழலுக்கு ஆளாகின்றனர்.

இந்த சூழலில் தான் வங்கிகளுக்கு மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்குகின்றன. மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் போது கடனை திரும்ப செலுத்தலாம். பீகார் மாநிலத்தில் ஏற்கனவே மாணவர்கள் உயர்க் கல்விக்காக கல்வி கடன் பெறுவதற்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விக்கடன் வழங்கப்படும் என்ற முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் . மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதை உறுதி செய்யக் கூடிய வகையில் ஸ்டூடன்ட் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் இந்த சலுகை கிடைக்கும் என அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விண்ணப்பம் செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்படும் என்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்து இருக்கிறார். இதற்கு முன்பு இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியுடன் நான்கு லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்பட்டு வந்தது. மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு 1 சதவீத வட்டியுடன் 4 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அனைவருக்கும் வட்டி இல்லாத கல்வி கடன் வழங்கப்படும் என நிதிஷ்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவப்பு வெளியிட்டு இருக்கிறார். பீகார் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பீகார் ஸ்டுடென்ட் கிரெடிட் கார்ட் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இது தான் தற்போது வட்டியில்லா கல்வி கடன் திட்டமாக மாறி இருக்கிறது.
இந்த திட்டத்தில் கடன் வாங்கும் மாணவர்கள் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டு இருக்கும் கல்வி கடன்களுக்கு 84 மாத தவணைகளில் திரும்ப செலுத்தலாம் என இருந்த நிலையில் அதனை 120 மாதங்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 60 மாத தவணைகளில் திரும்ப செலுத்தலாம் என இருந்தது அது தற்போது 84 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது.
பல்வேறு மாணவர்களும் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதை ஊக்குவிக்கும் வகையிலும் மாணவர்களின் எதிர்காலம் மட்டுமில்லாமல் பீகார் மாநிலத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும் வகையிலும் வட்டியில்லா கல்வி கடன் வழங்குவதாக நிதிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications