ஐடி வேலையை விடுத்து விவசாயம் செய்யப்போகிறேன் என கூறுவதே ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அப்படி விவசாயம் செய்யப் போன அனைவருமே வெற்றி பெற்றார்களா என்றால் இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அந்த வகையில் 14 ஆண்டு காலம் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்து ஒரு நபர் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதாகவும் இந்த 10 ஆண்டுகால விவசாய அனுபவம் தனக்கு என்னென்ன பாடத்தை கற்றுத் தந்தது என்றும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
ஐடி வேலையை விடுத்து விவசாயம் செய்ய வேண்டும் என வருபவர்கள் கட்டாயம் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரெடிட் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள முன்னாள் ஐடிஊழியர் ஒருவர் 14 ஆண்டு காலம் நான் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தேன். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்த வேலையை விடுத்து விவசாயம் செய்வதற்காக வந்துவிட்டேன் என கூறியிருக்கிறார்.

விவசாயம் செய்வது நமக்கு மன நிம்மதியை தரும் ஆனால் சில ரியாலிட்டிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார். விவசாயம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒரு வேலை, பிசிக்கலாகவும் சரி மெண்டல் ஆகவும் சரி அத்தனை எளிதல்ல என குறிப்பிடும் அவர் உங்களுக்கான லாபம் குறைவாக தான் இருக்கும் நீங்களே செய்யும்போது லாபம் கொஞ்சம் அதிகரிக்கலாம் பல சமயங்களில் நீங்கள் வேலைக்கு ஆட்களை அமர்த்தி தான் வேலை வாங்க வேண்டி இருக்கும் என குறிப்பிடுகிறார்.
ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் விவசாயம் செய்தால் குறைந்த லாபம் ரிஸ்க்கும் குறைவு, 5 ஏக்கருக்கு மேல் நீங்கள் விவசாயம் செய்கிறீர்கள் என்றால் ரிஸ்கும் அதிகம் லாபமும் அதிகம். அதே போல விவசாயம் செய்ய வருவதற்கு முன்பு எந்த பயிரை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பது முக்கியம் எனக் கூறியிருக்கிறார். பல்வேறு நாடுகளில் நடைபெறக்கூடிய போர் தொடங்கி காலநிலை மாற்றம் என ஒவ்வொன்றும் உங்களுடைய தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறும் அவர் ஆறு மாதங்களுக்கு நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்க வேண்டும் பணமாகவும் உடல் உழைப்பாகவும் அது இருக்கும் ஆனால் அதற்கான அவுட்புட் எப்படி கிடைக்கும் என்பதை அந்நிய காரணிகள் தான் முடிவு செய்கின்றன என பதிவு செய்திருக்கிறார்.
விவசாயம் செய்ய வருவதற்கு முன்பு மண்ணின் தன்மை , பூச்சிக்கொல்லி , பயிர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் மற்றும் சந்தையில் அதற்கான தேவை இருக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்யுங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே விவசாய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால் உங்களுக்கு அதை எளிது என கூறும் அவர் உங்களிடம் பணம் இருக்கிறது நேரம் இருக்கிறது என்றால் மட்டுமே விவசாயத்திற்கு வாங்க என தெரிவித்திருக்கிறார். குடும்பத்தினரின் ஆதரவும் இதில் மிகவும் முக்கியம் எனக் கூறுகிரார்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. ஒரு நபர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நான் கூறுகிறேன் விவசாயம் என்பது மிகவும் கடினமானது பலரும் அது தெரியாமல் களம் இறங்கி தோற்கிறார்கள் என்கிறார். ஒரு நபர் இதுதான் உண்மை நிலவரம் இது தெரியாமல் யாரும் நல்ல வேலையை விட்டு சென்று விடாதீர்கள் என கூறியிருக்கிறார். லாபம் வேண்டும் என்பதற்காக இந்த தொழிலுக்கு யாரும் சென்று விடாதீர்கள் என்றும் பலரும் பதிவு செய்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

