செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மருத்துவ துறையிலும் இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் கால்பதித்துவிட்டது.
மருத்துவ துறையில் ஏஐ: குறிப்பாக மருத்துவர் துறைகளில் நோய் கண்டறியும் சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சிகள் பெரிய பெரிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 14 வயது சிறுவன் ஏழே நொடிகளில் இதய நோயை கண்டறியும் திறன் கொண்ட ஒரு செயலியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறான்.

14 வயது சிறுவன் சாதனை :அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வசிக்கக்கூடிய சித்தார்த் நந்த்யாலா என்ற 14 வயது சிறுவன் தான் தற்போது மருத்துவ உலகம் மட்டுமல்ல தொழில்நுட்ப உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறான். இந்த சிறுவன் Circadian AI என்ற ஏஐ செயலியை உருவாக்கி இருக்கிறான். இந்த செயலியானது ஒரு நபருக்கு இதய நோய் வருவதற்கான ஆரம்பகால அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை மிகத் துல்லியமாக தெரிவிக்கிறதாம்.
7 நொடிகளில் இதய நோய் கண்டறியலாம்: பயனர்கள் இந்த செயலியை தங்களுடைய ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த செயலியை ஆன் செய்து தங்களின் நெஞ்சுக்கு அருகே கொண்டு வந்தால் போதும். இது அவருடைய இதயத்துடிப்பை பதிவு செய்து தன்னுடைய கிளவுட் அடிப்படையிலான இயந்திர கற்றல் மூலம் இதயத்துடிப்பினை பகுப்பாய்வு செய்து அவருக்கு ஏதேனும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றனவா அல்லது அதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை கணித்து வெளியிட்டு விடும்.
கிரகாடியன் ஏஐ செயலி: டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருக்கக்கூடிய நந்த்யாலா மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடும் அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த மருத்துவமனைகளில் இருந்து தரவுகளை பெற்றும் இந்த கிரகாடியன் ஏஐ செயலியை உருவாக்கி இருக்கிறார். இந்த செயலியை கொண்டு அமெரிக்காவை சேர்ந்த 15000 நோயாளிகளிடமும் இந்தியாவை சேர்ந்த 3500 நோயாளிகளிடமும் ஆய்வு நடத்தப்பட்டதில் 96 சதவீதம் துல்லியமான முடிவுகளை தருவது தெரிய வந்திருக்கிறது.
தற்போதைக்கு இது மருத்துவர்களுக்கான ஒரு ப்ரீ ஸ்கிரீனிங் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இதய நோய் சம்பந்தப்பட்ட துறையின் மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக இருக்கிறது என இதய நோய் நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.
அமெரிக்க அரசு பாராட்டு: நந்த்யாலா ஏற்கனவே STEM IT என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட தொகுப்புகளை வழங்கக்கூடிய நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த மாணவனின் திறமையை பாராட்டி ஏற்கனவே அமெரிக்க பிரதிநிதிகள் சபை பாராட்டு சான்றிதழை வழங்கி இருக்கிறது. கூடிய விரைவில் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கண்டறியக்கூடிய செயலியை தான் கொண்டுவர இருப்பதாக இந்த மாணவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications