கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. ஆனால் ஓசூர் விமான நிலையத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது பெங்களூரு சர்வதேச விமான நிலையம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. பெங்களூரு விமான போக்குவரத்து கழகம் தான் இதனை மேலாண்மை செய்து வருகிறது. இந்த அமைப்பு பெங்களூரு விமான நிலையத்தை கட்டமைக்கும் போது தங்களுடைய விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவு வரை புதிதாக எந்த ஒரு விமான நிலையத்தையும் கட்டமைக்க கூடாது என மத்திய அரசிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

மத்திய அரசே கூட ஏற்கனவே செயல்படும் சிவில் விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டருக்குள் புதிதாக கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைக்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. இதுதான் ஓசூரில் விமான நிலையத்தை கட்டமைப்பதில் பெரிய சிக்கலாக இருக்கிறது . ஓசூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அரசு ஒரு புறம் தீவிர படுத்திருக்கிறது.
மத்திய அரசின் அனுமதிக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் கிடைத்தாலும் பெங்களூரு விமான நிலைய நிறுவனம் ஒப்புதல் கொடுக்காமல் ஓசூரில் விமான நிலையத்தை கட்டமைக்க முடியாது. பெங்களூரு விமான நிலைய நிறுவனத்தில் கர்நாடக அரசுக்கும் ஒரு கணிசமான பங்கு இருக்கிறது என்பதால் ஓசூர் விமான நிலையத்தை தடுக்க கர்நாடகா அரசு முயற்சி செய்யலாம்.
இந்த 150 கிலோமீட்டர் விதிமுறையை கர்நாடக அரசு சுட்டிக்காட்டி ஓசூர் விமான நிலையத்தை வரவிடாமல் செய்ய முடியும் அல்லது மேலும் தாமதப்படுத்த முடியும். ஓசூரில் விமான நிலையம் வருவது பெங்களூரு இரண்டாவது விமான நிலையத்திற்கான திட்டத்திற்கு பெரும் பிரச்சனையாக அமையும் . மேலும் ஓசூர் விமான நிலையம் வந்துவிட்டால் பெங்களூரை சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஓசூர் விமான நிலையத்தை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். எனவே கர்நாடகா அரசு பெங்களூரு இரண்டாவது விமான நிலையத்தை சீக்கிரமாக கட்ட வேண்டும் எப்படியாவது ஓசூர் விமான நிலைய திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த சூழலில் தான் ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேவை அதிகரிக்கும் பட்சத்தில் ஒரே நகரில் 2 விமான நிலையங்களை அமைக்க மாநில அரசுகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என தெரிவித்தார்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் விமான நிலையம் அதன் பயணிகள் கையாளும் திறனை எட்டி விட்டது ஆனால் தேவை அதிகரிக்கிறது எனும் போது 150 கிலோ மீட்டர் தொலைவில் இன்னொரு விமான நிலையம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை என்பது போன்ற ஒரு கருத்தினை அவர் வெளியிட்டு இருக்கிறார். எனவே தமிழ்நாடு அரசு இதனை சுட்டிக்காட்டி ஓசூர் விமான நிலையத்துக்கு ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications