அமெரிக்க அரசு இந்தியர்களுக்கும் இந்திய வர்த்தகத்திற்கும் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், இந்தியர்களின் அமெரிக்கக் கனவு என்றும் தீராதது. இதை உண்மையாக்கும் வகையில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து விசா பெற நெருக்கடி கொடுத்து வந்த அதே வேளையில் அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் சுமார் 1,25,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் சுமார் 22 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அமெரிக்க மண்ணில் முதலீடாகச் செய்துள்ளது என CII அமைப்பு Indian Roots, American Soil 2020 என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கிய மாநிலங்கள்
சுமார் 155 நிறுவனங்கள் அமெரிக்காவில் 50 மாநிலங்களிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக டெக்சாஸ், கலிபோர்னியா, நியூ ஜெர்சி, நியூயார்க், ப்ளோரிடா ஆகிய பகுதிகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதிக முதலீடு
இதேபோல் அமெரிக்காவில் பிற மாநிலங்களில் இருக்கும் நிறுவனங்களை விடவும் டெக்சாஸ், கலிபோர்னியா, நியூ ஜெர்சி, நியூயார்க், Massachusetts ஆகிய பகுதிகளில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளது என CII அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
அதிக இந்திய நிறுவனங்கள்
டெக்சாஸ், கலிபோர்னியா, நியூ ஜெர்சி, நியூயார்க், இல்லினோய்ஸ், ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான இந்திய நிறுவனங்கள் இருப்பதாகவும், இந்திய நிறுவனங்களுக்கு இந்த மாநிலங்களில் அதிகளவிலான வரவேற்பும் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெக்சாஸ் மாநிலம் இந்திய நிறுவனங்களுக்குத் தனிப்பட்ட கவனிப்பையும் கொடுப்பதாக Senator John Cornyn தெரிவித்துள்ளார்.
டாப் 5
அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வேலைவாய்ப்பையும், எவ்வளவு முதலீட்டையும் செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
டெக்சாஸ் - 17,578 வேலைவாய்ப்புகள்
கலிபோர்னியா - 8,271 வேலைவாய்ப்புகள்
நியூஜெர்சி - 8,057 வேலைவாய்ப்புகள்
நியூயார்க் - 6,175 வேலைவாய்ப்புகள்
ப்ளோரிடா - 5,454 வேலைவாய்ப்புகள்
டெக்சாஸ் - 9.5 பில்லியன் டாலர் முதலீடு
நியூஜெர்சி - 2.4 பில்லியன் டாலர் முதலீடு
நியூயார்க் - 1.8 பில்லியன் டாலர் முதலீடு
ப்ளோரிடா - 915 மில்லியன் டாலர் முதலீடு
Massachusetts - 873 மில்லியன் டாலர் முதலீடு
கொரோனா
கொரோனா தாக்கத்தால் பல ஆயிரம் இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வந்தாலும், அந்நாட்டில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications