நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது என்பது மிகவும் எளிமையானதாக மாறிவிட்டது. இன்டர்நெட் கனெக்சன் இருக்கிறது ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றாலே போதும் எளிமையாக பல்வேறு விஷயங்களை நம்மால் ஆன்லைனிலேயே கற்றுக் கொள்ள முடிகிறது. இப்படி யூடியூப் வாயிலாக கோடிங் கற்று கொண்டு மாதம் 1.2 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஒரு கல்லூரி மாணவர்.
அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் தான் Zach Yadegari. 18 வயதான இவர் Cal AI என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். Cal AI என்பது கலோரியை ட்ராக்கிங் செய்யக்கூடிய ஒரு செயலி இந்த செயலின் மூலம் இவர் ஒரு மாதத்திற்கு 1.2 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறார் . ஒரு உணவினை புகைப்படம் எடுத்து இந்த செயலியில் உள்ளீடு செய்தாலே போதும் அதில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை நமக்கு காட்டிவிடும். எனவே பயனர்கள் அந்த உணவை உட்கொள்ளலாமா வேண்டாமா என்ற முடிவினை எடுத்துக் கொள்ளலாம் .

2024 ஆம் ஆண்டு மே மாதம் தான் இந்த செயலியை இந்த இளைஞர் அறிமுகம் செய்தார். கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர் .இது தொடர்பாக சிஎன்பிசி தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் இந்த இளைஞர் ஏழு வயதிலேயே தான் கோடிங் கற்றுக் கொண்டதாகவும் யூடியூப் வாயிலாகவே ஒரு செயலியை எப்படி உருவாக்குவது என்பதை தான் கற்றுக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார் .
ஒரு விஷயத்தில் நமக்கு ஆர்வம் இருக்கிறது என்றால் அதனை கற்றுக் கொள்வதற்கு தற்போது பல்வேறு வழிகள் வந்துவிட்டன ஏழு வயதில் நான் கற்றுக் கொண்ட அந்த கோடிங் தான் எனக்கு தற்போது பெரிய தொழிலையும் உருவாக்கி தந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். உயர் பள்ளியில் படிக்கும் போது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ததாகவும் எந்தெந்த உணவை எடுத்துக் கொண்டால் எவ்வளவு கலோரி நமக்கு கிடைக்கும் என்ற தகவல் கிடைக்காமல் தவித்ததாகவும் அப்போதுதான் கலோரியை ட்ராக்கிங் செய்யக்கூடிய ஒரு செயலியை ஏன் நாம் உருவாக்க கூடாது என முயற்சி செய்ததாகவும் கூறுகிறார்.

இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு மாதத்திற்கு 220 ரூபாய் சந்தாவாக செலுத்த வேண்டும் . இந்த செயலி அறிமுகம் செய்த முதல் மாதமே தனக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாக கூறும் இந்த இளைஞர் தற்போது ஒரு மாதத்திற்கு 2 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் 30 ஊழியர்களைக் கொண்டு இந்த நிறுவனத்தை தான் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இது தவிர தற்போது தான் கல்லூரிக்கு சென்று படிப்பதாக கூறும் இவர் அண்மையில் தான் லம்போர்கினி காரை வாங்கியதாக தெரிவித்திருக்கிறார். மிகப்பெரிய ஒரு ஏஐ நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications