மும்பையை சேர்ந்த 19 வயது சட்ட கல்லூரி மாணவி சம்ரிதி இலந்தோலி, தனது வீட்டுச் சமையலறையை ஒரு தொழில் கூடமாக மாற்றி 6 மாதங்களில் ரூ.4 லட்சம் சம்பாதித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். படிப்பில் கவனம் செலுத்தி வரும் மாணவி சம்ரிதிக்கு, சமையலிலும் குறிப்பாகப் பேக்கிங்கில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இந்த ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக விட்டுவிடாமல், கடந்த 2024 ஆம் ஆண்டில் 'லா ஜோய்' (La Joie) என்ற பெயரில் தனது வீட்டிலேயே ஒரு பேக்கரியை தொடங்கினார். ஆரம்பத்தில், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக மட்டுமே பொம்போலோனி (Bomboloni), ப்ரூக்கிகள் (Brookies), டீ கேக்குகள் மற்றும் ப்ரவுனிகள் போன்ற இனிப்புகளை தயாரித்து வந்தார்.

பின்னர், அவருடைய இனிப்புகளுக்குக் கிடைத்த அதீத வரவேற்பு, இதை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது. சோசியல் மீடியாக்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியதால் அவர் விளம்பரங்களுக்குப் பணம் செலவழிக்காமல், தனது இனிப்புகள் தயாரிக்கும் விதத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாகப் பதிவு செய்து பகிர ஆரம்பித்தார்.
சுவையாகவும், கவரும் வகையிலும் இருந்த அவரது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. பார்வைகள் அதிகரிக்க அதிகரிக்க, ஆர்டர்களும் குவியத் தொடங்கின. இப்படியாக, அவர் தனது தொழிலைத் தொடங்கி 6 மாதங்களுக்குள் சுமார் 450-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து, ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்.
ஆனால், அவர் தொழில்முனைவோராக மாறியது அவ்வளவு எளிதானதாக இல்லை. அவரது தாய் வீட்டில் வைத்திருந்த பேக்கிங் கருவிகளை பயன்படுத்தியது ஆரம்ப முதலீடுகளை மிச்சப்படுத்த உதவியது. சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயையும் மீண்டும் தொழிலில் முதலீடு செய்ததன் மூலம், 'லா ஜோய்' நிறுவனம் விரைவில் வளர்ந்தது.
ஆனால், டெலிவரி செலவுகள் சில சமயம் இனிப்பின் விலையை விட கூடுதலாக இருப்பது, உணவுப் பொருட்களை வாடிக்கையாளரிடம் சரியாக கொண்டு சேர்ப்பது போன்ற பல சவால்களை அவர் சந்தித்துள்ளார். இருப்பினும், அவர் இதைப் பார்த்து துவண்டு போகாமல், ஒவ்வொரு சிக்கலில் இருந்தும் பாடத்தை கற்றுக்கொண்டு, தன்னை மாற்றிக் கொண்டார்.
பல சவால்கள் வந்தபோதும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதற்கிடையே, படிப்புக்கும், தொழிலுக்கும் இடையில் சமநிலையைக் கடைபிடிப்பதுதான் அவரது தினசரி போராட்டமாக உள்ளது. கல்லூரிக்கு செல்ல வேண்டி இருப்பதால், அவர் அதிகாலையிலேயே எழுந்து பேக்கிங் வேலைகளை முடித்து, ஆர்டர்களை பேக்கிங் செய்து, அவற்றை பார்சல் செய்ய தயார் செய்துவிட்டுத்தான் கல்லூரிக்குச் செல்கிறார்.
ஆர்வம், கடின உழைப்பு, சமூக வலைதள விளம்பரங்கள் இருந்தால் ஒரு சிறிய யோசனையைக் கூட, படிக்கும்போதே ஒரு பெரிய வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும் என்பதற்கு மாணவி சம்ரிதி இலந்தோலியின் உதாரணமாக உள்ளார். தனக்கென ஒரு தொழிலை தொடங்க தயங்கும் பல இளம் தலைமுறையினருக்கு சம்ரிதி, ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications