இந்திய ஐடி துறை தற்போது பெரும் அச்சத்திற்கும், முதலீட்டாளர்கள் பீதிக்கும் மத்தியில், AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான சேவையை வழங்கும் நிறுவனமான பிராக்டல் அனலிட்டிக்ஸ் (Fractal Analytics) தனது IPO-வை தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் முதல் 'ப்யூர்-ப்ளே' AI நிறுவன IPO ஆகும். அதாவது, AI மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் மூலமாக வருமானம் ஈட்டும் நிறுவனம். இதனால் முதலீட்டு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஐபிஓ முதல் நாள்
பிராக்டல் அனலிட்டிக்ஸ் ஐபிஓ இன்று இந்திய பங்குசந்தையில் தொடங்கியுள்ளது. இந்த ஐபிஓ வெளியிடு பிப்ரவரி 11, 2026 வரை திறந்திருக்கும். இந்நிறுவனம் ஒரு ஈக்விட்டி பங்கை ரூ.857 முதல் ரூ.900 வரையிலான விலை வரம்பில் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இந்த ஐபிஓ மூலம் Fractal Analytics மொத்தம் ரூ.2,834 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் புதிய பங்குகள் மூலம் ரூ.1,023 கோடியும், ஏற்கனவே உள்ள பங்குதாரர்களின் விற்பனை (Offer for Sale - OFS) மூலம் ரூ.1,810 கோடியும் திரட்டப்பட உள்ளது.

பிராக்டல் அனலிட்டிக்ஸ் AI மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்த ஐபிஓ மூலம் BSE மற்றும் NSE ஆகிய இரு பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட உள்ளது. முதலீட்டாளர்கள் இந்த AI அடிப்படையிலான நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இது சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் இந்திய ஐடி துறை சுமார் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் Fractal Analytics IPO-வில் முதலீடு செய்யலாமா..? டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களுக்கும் இந்த நிறுவனத்திற்கும் என்ன வித்தியாசம்..? என்பதை முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐடி துறையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு
சமீபத்தில் உலகளாவிய AI நிறுவனமான Anthropic புதிய AI கருவிகளை அறிமுகப்படுத்தியது. இந்த கருவிகள் ஆவணங்களை ஆய்வு செய்தல், டேட்டா பகுப்பாய்வு, விற்பனை மற்றும் நிறுவன பணிகளை தானியங்கி முறையில் செய்வதால் மிக வேகமாகவும் குறைந்த செலவிலும் ஒரு நிறுவனத்தை இயக்க முடியும். Anthropic சுமார் 11 பிளக்கின்களை அறிமுகம் செய்து லீகல், சேல்ஸ், மார்கெட்டிங் என சாப்ட்வேர் டெவலப்மென்ட் தவிர அனைத்து பிரிவுகளையும் ஒரு நிறுவனத்தில் ஆட்டோமேட்டிக் ஆக செய்யும் வகையில் பிளகின்களை அறிமுகம் செய்துள்ளது. இது மனிதர்கள் செய்யும் பணிகளை பெருமளவு குறைக்கும் என்பதால் ஐடி சேவை துறைக்கு இந்த 11 பிளகின் பெரும் அச்சுறுதலாக மாறியுள்ளது.
இதனால், இந்திய ஐடி நிறுவனங்கள் போன்றவை பெரும் அச்சத்தில் உள்ளன. ஏனெனில், TCS, Infosys, Wipro போன்ற நிறுவனங்கள் அதிகளவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களை வேலைக்கு அமர்த்தி, வாடிக்கையாளர்களிடம் ஊழியர்களின் பணி நேரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது தான் இந்த நிறுவனங்களின் முக்கிய வருமான மாடல். AI தொழில்நுட்பம் இந்த வர்த்தக மாடலை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, Nifty ஐடி இன்டெக்ஸ் கடுமையாக சரிந்தது. வெறும் ஐந்து நாட்களில் இந்திய ஐடி நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் கோடி குறைந்தது. இது கோவிட் காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய சரிவுகளில் ஒன்று. TCS, Infosys, Wipro உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன. முதலீட்டாளர்கள் ஐடி துறையின் எதிர்காலத்தை குறித்து கவலையிலும், அச்சத்திலும் உள்ளனர். இதேபோல் ஐடி ஊழியர்களும் அவர்களின் வேலைவாய்ப்பு உத்தரவாதம் குறித்த பீதியில் உள்ளனர்.
பிராக்டல் அனலிட்டிக்ஸ் ஏன் வேறுபட்டது?
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்கள் (TCS, Infosys போன்றவை) மனிதர்கள் செய்யும் வேலைகளால் வருமானம் ஈட்டுகின்றன. ஆனால் பிராக்டல் அனலிட்டிக்ஸ் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைகளை செய்யும் நிறுவனம். இது AI அடிப்படையிலான முடிவெடுக்கும் கருவிகளை (decision-making tools) உருவாக்கி, பெரிய நிறுவனங்களுக்கு வழங்குகிறது. AI ஆட்டோமேஷன் அதிகரிப்பது இந்த நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் அல்ல, மாறாக வாய்ப்பு. இதனால், AI பயத்தால் ஐடி பங்குகள் சரியும் போது, பிராக்டல் போன்ற AI நிறுவனங்கள் தனித்து நிற்கின்றன.
பிராக்டல் நிறுவனம் பெரிய அளவிலான டேட்டாவை அனலிசிஸ் செய்து, வணிக முடிவுகளை சிறப்பாக எடுக்க உதவுகிறது. இந்நிறுவனத்தின் சேவைகள் ஹெல்த்கேர், நிதி, ரீடைல், நுகர்வோர் பொருட்கள் துறைகளில் செயல்திறனை அதிகரிக்கிறது. மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், கூகுள், என்விடியா, மெட்டா போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதன் வருமானத்தில் 65%க்கும் மேல் அமெரிக்காவிலிருந்து வருகிறது.
இந்த IPO வெளியிடும் நேரம் ஏன் சுவாரசியமானது?
ஐடி துறையில் AI அச்சம் நிலவும் இந்த நேரத்தில் பிராக்டல் IPO வெளியாவது மிக முக்கியமானது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு AI அச்சுறுத்தலாக இருந்தால், பிராக்டலுக்கு AI வாய்ப்பாக உள்ளது.
முதலீட்டாளர்கள் பிராக்டல் அனலிட்டிக்ஸ் ஐபிஓ-வை 'பிரச்சினையின் பகுதி' அல்ல, 'எதிர்காலத்தின் பகுதி' என்று பார்க்கலாம். இந்த IPO இந்தியாவின் AI துறை வளர்ச்சியை பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI தொழில்நுட்பம் வேகமாக வளரும் இந்த காலத்தில், பிராக்டல் போன்ற நிறுவனங்கள் ஐடி துறையின் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபிஓ ஐடி துறையின் மாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது, AI-யை அச்சமாக பார்ப்பவர்களுக்கு சவால், ஆனால் AI-யை ஏற்றுக்கொள்பவர்களுக்கு பெரிய வாய்ப்பு. இதுதான் சந்தையின் தற்போதைய நிலைப்பாடு, சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது AI துறையில் முதலீடு செய்யும் ஒரு நல்ல வழியாக இருக்கலாம்.
இதேபோல் பிராக்டல் அனலிட்டிக்ஸ் ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் இந்நிறுவனத்தின் நிதி நிலவரத்தை அதன் RHP ஆறிக்கையின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொண்டு முதலீடு செய்யவும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications