உலகம் முழுவதும் ஒரு சில தனி நபர்கள், தனித் தீவையோ அல்லது தனி நாட்டையோ வாங்கி உரிமை கொண்டாடுகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்தியானந்தா 'கைலாசா' என்ற நாட்டை உருவாக்கி, தனது சீடர்களுடன் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.
இந்நிலையில் தான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், புதிதாக 'வெர்டிஸ்' என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளார். மேலும், அவர் அந்த நாட்டில் அதிபராகியுள்ளார். டேனியல் ஜாக்சன் என்ற இளைஞர், குரோஷியாவுக்கும் - செர்பியாவுக்கும் இடையே டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கரில் அமைந்துள்ள ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தை 'வெர்டிஸ்' குடியரசு நாடாக அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், அந்நாட்டின் அதிபராக அவரே பதவியேற்றுள்ளார். நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, இந்தப் பகுதி சட்டப்பூர்வ சாம்பல் மண்டலத்தில் இருக்கிறது. இது, உரிமை கோரப்படாத நிலமாகும். இந்த வெர்டிஸ் நாட்டை உருவாக்க தனது 14 வயது முதலே டேனியல் ஜாக்சன் ஆர்வமாக இருந்துள்ளார்.
மே 30, 2019 அன்று, அவர் வெர்டிஸ் சுதந்திரக் குடியரசின் சுதந்திரத்தை அறிவித்தார். அப்போதில் இருந்து ஒரு கொடி, ஓர் அடிப்படை அரசியலமைப்பு, அமைச்சரவை ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். இப்போது அந்நாட்டில் 400 பேர் குடியிருந்து வருவதாக தெரிகிறது. இந்நாட்டின் மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் ஆகியவை உள்ளன. மேலும், யூரோ நாணயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நாட்டை, ஓசிஜெக்கில் இருந்து படகு மூலம் மட்டுமே செல்ல முடியும். வெர்டிஸின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை சர்வதேச பயணத்திற்குச் செல்லுபடியாகாது. ஆனால், ஒருசிலர் வெர்டிசியன் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி மற்ற நாடுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்த இளைஞர் டேனியல் ஜாக்சன் கூறியுள்ளார்.
மருத்துவம், பாதுகாப்பு அல்லது சட்ட நிபுணத்துவம் பெற்ற நபர்களே இந்த நாட்டின் குடிமகனாக முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது நாட்டின் அதிபராக ஜாக்சன் இருந்து வந்தாலும், அவர் தனக்கு அதிகார வெறி இல்லை என்று கூறியுள்ளார். மேலும், தாம் பதவி விலகி சுதந்திரமான தேர்தலை நடத்தவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications