கூகுளின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிநீக்கங்களை, கூகுளின் ஏஐ தொடர்பான பணிகளை கையாளும் அவுட்சோர்சிங் நிறுவனமான குளோபல் லாஜிக் (Global Logic) மேற்கொண்டுள்ளது.
பணிநீக்கத்திற்கு ஆளான ஊழியர்கள், தாங்கள் செய்த வேலையே எதிர்காலத்தில் ஏஐயால் மாற்றப்படலாம் என்று அச்சத்தில் இருந்தனர். தற்போது இந்த பணிநீக்கம் அவர்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களில் பலர், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளில் முதுகலை பட்டங்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்கள்.

இவர்களுக்கு, கூகுளின் ஜெமினி சாட்பாட் (Gemini chatbot) பதில்களை ஆய்வு செய்வது, கூகுள் தேடலுக்கான ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட சுருக்கங்களை திருத்துவது, பதில்கள் துல்லியமானதாகவும், நம்பகமானதாகவும் உள்ளதா என்பதை சரிபார்ப்பது போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த வேலை "AI ரேட்டிங்" என்று அழைக்கப்படுகிறது. இது கூகுளின் AI அமைப்புகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.
தங்களது வேலைக்கு அதிக திறமை தேவைப்பட்டாலும், குறைவான சம்பளம், குறுகிய காலக்கெடு மற்றும் வேலை பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை ஊழியர்கள் எதிர்கொண்டனர். சிலர், குளோபல் லாஜிக் நிறுவனம், தாங்கள் செய்யும் வேலையை தானியங்குபடுத்தும் கருவிகளை உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டினர்.
அதேபோல், சம்பள விஷயத்திலும் பெரிய அளவில் பாகுபாடு இருந்தது. குளோபல் லாஜிக் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு மணிக்கு 28 முதல் 32 அமெரிக்க டாலர் வரை வழங்கப்பட்டது. அதே வேலையை செய்த 3ஆம் தரப்பு ஒப்பந்த ஊழியர்களுக்கு மணிக்கு 18 முதல் 22 டாலர் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக, சில ஊழியர்கள் தங்கள் வேலை நிலைமைகளை மேம்படுத்தக் கோரி சங்கம் அமைக்க முயற்சித்து வந்தனர். மேலும், குறைவான காலத்தில் அதிக வேலைச்சுமை காரணமாக வேலையின் தரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஊழியர்கள் அமெரிக்க தொழிலாளர் வாரியத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் பணிநீக்கங்களுக்கு கூகுள் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் கோர்ட்னி மென்சினி கூறுகையில், "இந்த ஊழியர்கள் குளோபல் லாஜிக் அல்லது அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்கள், கூகுளின் ஊழியர்கள் அல்ல. பணியாளர்களின் வேலை மற்றும் வேலை நிலைமைகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications