
இந்தியாவின் மொத்த உற்பத்தி (GDP) சரிந்து வருவதாலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கிவிட்டதாலும் இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீடு குறைக்கப்படும் என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரிக்கை தான் விடுத்திருந்தது.
இந் நிலையில், பிட்ச் அந்த நடவடிக்கையை எடுத்தேவிட்டது. இந்தியாவின் முதலீட்டு தரத்தை 'ஸ்திரமானது' (stable) என்ற நிலையிலிருந்து 'எதிர்மறையானது' (negative) என்ற நிலைக்கு பிட்ச் குறைத்துள்ளது.
இதற்கு இந்தியாவில் நிலவும் ஊழல் மற்றும் நின்றுபோன பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை பிட்ச் காரணங்களாகக் கூறியுள்ளது.
மிகக் குறைவான வளர்ச்சி மற்றும் கடும் பணவீக்கம், ஓட்டுக்காக தரப்படும் ஏராளமான மானியங்கள் ஆகியவற்றோடு பெரும் ஊழலும் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன என்று பிட்ச் விளக்கம் தந்துள்ளது.
இதனால் மத்திய அரசின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை முதலீட்டாளர்கள் திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பணத்தை முதலீட்டாளர்கள் பொருளாதாரரீதியில் ஸ்திரமான நிலையில் உள்ள நாடுகளில் முதலீடு செய்யலாம். இதனால் நாட்டில் பணப் புழக்கம் குறைந்து விலைவாசி மேலும் விண்ணைத் தொடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் தர வரிசையை மட்டுமின்றி மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான NTPC, SAIL, IOC, PFC, GAIL, REC, NHPC ஆகியவற்றின் தர வரிசையையும் பிட்ச் குறைத்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்களில் உள்ள முதலீடுகளும் வெளியேறும் அபாயம் உருவாகியுள்ளது.
பிரணாப் கண்டனம்:
ஆனால், பிட்ச் மற்றும் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் அமைப்புகளின் இந்த நடவடிக்கை தவறானது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
பழைய விவரங்களை கையில் வைத்துக் கொண்டு ரேட்டிங் ஏஜென்சிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்திய பொருளாதாரத்தில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள நல்ல விஷயங்களை இவர்கள் கணக்கில் கொள்வதே இல்லை என்று பிரணாப் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications