டெல்லி: கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-மே மாத காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவின் ஏற்றுமதி இந்த ஏப்ரல்-மே மாதத்தில் 0.69 சதவீதம் குறைந்து 5,013 கோடி டாலராக உள்ளது.
கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 5,048 கோடி டாலராக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதத்தில் ஏற்றுமதி 0.69 சதவீதம் குறைந்து 5,013 கோடி டாலராக(ரூ.2.81 லட்சம் கோடி) உள்ளது. கடந்த மே மாதத்தில் ஏற்றுமதி 4.16 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 2,568 கோடி டாலராகக் குறைந்தது. இதனால் தான் தற்போது ஏற்றுமதி வீழ்சசி அடைந்துள்ளது.
கடந்த மே மாதம் ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள், ரெட்மேட் ஆடைகளின் ஏற்றுமதி 9 மற்றும் 15.82 சதவீதம் குறைந்தது.
பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதையடுத்து நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத் திட்டங்களை குறைத்து வருகின்றன. கடந்த மே மாதத்தில் இயந்திர இறக்குமதி 8 சதவீதம் குறைந்ததால் அம்மாதத்தில் மட்டும் இறக்குமதி 7.36 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 4,190 கோடி டாலராக(ரூ.2.35 லட்சம் கோடி) குறைந்தது.
இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையேயான வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை கடந்த 2011ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மே மாதத்தில் 12 சதவீதம் குறைந்து 1,622 கோடி டாலராக சரிந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 36,000 கோடி டாலர் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மே மாதத்தில் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளதால் இலக்கை எட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications