டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு பாதியாகக் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துக் கொண்டே போனதையடுத்து இந்த நிதியாண்டின் துவக்கத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 670 கோடி இழப்பை சந்தித்து வந்தன.
ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு பாதியாகக் குறைந்து ரூ. 372 கோடியாகியுள்ளது.
இப்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 83.53 டாலராக உள்ளது. இந்த நிதியாண்டின் துவக்கத்தில் இதன் விலை 120 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கச்சா எண்ணெயை பயன்படுத்தும் நாடான சீனாவில் கடந்த ஜூன் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறைந்ததுடன், ஏற்றுமதியும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலும் தொழில்துறை உற்பத்தி குறைந்து, வேலை இழப்பு அதிகரித்து வருகிறது.
இந்தக் காரணங்களால் தான் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications