டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
பெட்ரோல் விலையை அவ்வப்போது உயர்த்திவிடுவதால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அதை விற்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், டீசல் விலையை உயர்த்தினால் லாரி, வேன் வாடகைகள் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிடும் என்பதால் அதன் விலையை மத்திய அரசு நீண்ட காலமாக உயர்த்தவில்லை.
இதனால் ஒரு லிட்டர் டீசலை விற்பதால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 15 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சீராக்க மத்திய அரசின் செலவுகளை, மானியங்களை குறைத்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதன் முதல் படியாக டீசலுக்குத் தரப்படும் மானியத்தை ஓரளவுக்குக் குறைக்கும் வகையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தியே ஆக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் பிரதமர் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் உயர்த்தினால், தங்களது வேட்பாளருக்கு கஷ்டப்பட்டு திரட்டி வைத்திருக்கும் பல்வேறு கட்சிகளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், இந்தத் தேர்தலுக்குப் பின் விலையை உயர்த்தலாம் என சோனியா கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இப்படி ஒரு செய்தி பரவியதுமே இன்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் பங்கு விலையில் இன்று திடீரென உயர்ந்துவிட்டன.
உஷ்...!


Click it and Unblock the Notifications