
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தென் மண்டல துணை தலைவரும், திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான அனிதா வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மகாராஷ்டிராவில் கனரக வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தி இயக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இயக்கபடும்போது எங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரக்குகளை கொண்டு சேர்க்க முடியாது. தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதால் 10 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை கடக்க 14 மணி நேரம் ஆகும். எனவே, இந்த புதிய விதிமுறையைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 17ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம்.
எங்களது நியாயமான போராட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் தூத்துக்குடியில் இருந்து சில்வாசாவுக்குக் காப்பர் லோடு கொண்டு செல்லும்போது லாரிகளைக் கடத்திச் செல்வது, டிரைவர் மற்றும் கிளீனர்களைக் கடத்தி கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் டிரைவர் மற்றும் கிளீனர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே, இப்பிரச்சனைக்குக் கர்நாடக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது மத்திய அரசு டீசல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
இந்தக் கூட்டத்தில் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் குருசாமி, பொருளாளர் தன்ராஜ், இயக்குனர் பழனிவேல் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications