டெல்லி: பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கிவரும் தள்ளுபடி சலுகைகளை நிறுத்துமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்கள். மருத்துவக் காப்பீட்டுத் துறையில் இவற்றின் சந்தைப் பங்கு 60 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக குழு மருத்துவக் காப்பீட்டுப் பிரிவில் இவற்றின் பங்களிப்பு 50 விழுக்காடாகும்.
கடந்த நிதி ஆண்டில் இந்த 4 நிறுவனங்களும் குழு மருத்துவக் காப்பீட்டு பிரிமியம் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ8145 கோடி. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்போ ரூ1,500 கோடி. இதனால்தான் இத்தகைய இழப்பைத் தவிர்க்கும் வகையில் குழு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தள்ளுபடி சலுகைகளை நிறுத்துமாறு நிதி அமைச்சகம் கோரியிருக்கிறது. அத்துடன் காப்பீட்டு பிரிமியம் கட்டணத்தை 50 விழுக்காடு அளவுக்கு உயர்த்தவும் நிதி அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.