அகமதாபாத்: பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதால் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்கள் சம்பளத்தை வெகுவாகக் குறைத்துள்ளனர்.
பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இதையடுத்து குஜராத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் சம்பளத்தை பெருமளவு குறைத்துள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அதிக சம்பளம் பெறும் முதல் பத்து சி.இ.ஓ.க்களில் ஒருவர் ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தின் சேர்மன் பங்கஜ் பட்டேல். ரூ.28.6 கோடி சம்பளம் வாங்கிய அவர் 2011-2012ல் வெறும் ரூ.12 கோடியே வாங்கியுள்ளார்.
இதே போன்று டிஷ்மேன் பார்மா நிறுவனத்தின் சேர்மனும், எம்.டி.யுமான ஜன்மஜெய் வியாஸ் தனது சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளார். அதானி குழும தலைவர் கௌதம் அதானி இந்த ஆண்டு சம்பள உயர்வு பெறவில்லை. மேலும் டாரன்ட் பவர் நிறுவனத்தின் டைரக்டர் மார்க்கண்ட் பட் 2011-2012ல் தனது சம்பளத்தை குறைத்து வெறும் ரூ.12.53 கோடி பெற்றுள்ளார். கடந்த 2009-2010ம் ஆண்டு ரூ.21.5 கோடி சம்பளத்துடன் இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் டைரக்டர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் டாரன்ட் குழும சேர்மன் சுதீர் மேத்தாவின் சம்பளம் உயர்ந்துள்ளது. டாரன்ட் குழுமத்தின் மின்சார தொழில் மூலம் மட்டும் அவருக்கு சம்பளம் மற்றும் கமிஷனாக ரூ.9.50 கோடி கிடைத்துள்ளது. இதுவே 2010-2011ல் ரூ.7.50 கோடியாகவும், 2009-2010ல் ரூ.6.87 கோடியாகவும் இருந்தது.
2011-2012ல் டாரன்ட் பார்மாசுட்டிகல்ஸ் மூலம் மேத்தாவுக்கு ரூ.3 கோடி சம்பளம் கிடைத்துள்ளது. இதுவே கடந்த 2010-11ல் ரூ.2.5 கோடியாக இருந்தது. டாரன்ட் பார்ம்சுட்டிகல்ஸின் எம்.டி.யும், சுதீரின் சகோதரருமான சமீர் மேத்தா 2011-2012ல் ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். முன்னதாக 2010-11ல் ரூ.4.13 கோடி பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications