
மேலும் ஈரானுடனான 250 பில்லியன் டாலர் பண பரிவர்த்தனையை ஸ்டாண்டர்ட் அண்ட் சார்ட்டர்ட் வங்கி மறைத்துவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க் மாகாணத்தில் நிதி சேவைத் துறை (டிபார்ட்மென்ட் ஆஃப் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் - DFS) என்ற வங்கி வர்த்தக கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. வங்கிகளின் அனைத்து விதமான செயல்பாடுகளையும் இது மேற்பார்வையிடுகிறது.
ஸ்டாண்டர்ட் அண்ட் சார்ட்டர்ட் வங்கி தனது பல பணிகளை இந்தியாவில் அவுட்சோர்ஸ் செய்துள்ளது. அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட இந்தப் பணிகளையும் டி.எஃப்.எஸ் அமைப்பு கண்காணித்து வருகிறது.
இந்த அமைப்பு நடத்தியுள்ள விசாரணையில், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் ஸ்டாண்டர்ட் அண்ட் சார்ட்டர்ட் வங்கியின் இந்தியப் பிரிவின் செயல்பாடுகளில் பல குறைகள் உள்ளன.
கறுப்புப் பண பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவோ கண்காணிக்கவோ இந்திய பிரிவில் போதிய விதிமுறைகள் இல்லை. இதன் மூலம் தீவிரவாதிகள், ஆயுதத் தரகர்கள் ஆகியோருக்கு பல பில்லியன் டாலர்கள் போய்ச் சேர்ந்துள்ளன.
ஸ்டாண்டர்ட் அண்ட் சார்ட்டர்ட் வங்கியின் இந்தியப் பிரிவின் தவறுகள் காரணமாக அமெரிக்க நிதி அமைப்பு முழுவதுமே தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஈரான் தொடர்புடைய சுமார் ரூ. 13 லட்சம் கோடி (250 பில்லியன் டாலர்) பண பரிவர்த்தனையை ஸ்டாண்டர்ட் அண்ட் சார்ட்டர்ட் வங்கி மறைத்துவிட்டது என்று டி.எஃப்.எஸ். குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டையடுத்து ஸ்டாண்டர்ட் அண்ட் சார்ட்டர்ட் வங்கியின் பங்குகள் உலகின் பல்வேறு பங்குச் சந்தைகளிலும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட அதன் 25 சதவீத மதிப்பு கரைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications